சந்திமாலின் சாதனை முச்சதமும் நிகழ்த்தப்பட்ட அரிய சாதனைகளும்

211
Chandimal

இலங்கை உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் முச்சதம் அடித்து தனிநபர் அதிகட்ச ஓட்டங்களைக் குவித்த வீரராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால் புதிய சாதனை படைத்தார்.

இந்த நிலையில், இலங்கை அணியின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சாளரான டில்ருவன் பெரேராவும் முதல்தரப் போட்டிகளில் 800 விக்கெட் மைல்கல்லை எட்டி சாதனை புரிந்தார்.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடரின் டியர் சுப்பர் 8 சுற்றின் கடைசி வாரத்துக்கான போட்டிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகின.

இதில் கட்டுநாயக்கவில் நேற்றுமுன்தினம் (25) சரசன்ஸ் கழகத்துடன் நடைபெற்ற போட்டியில் இலங்கை இராணுவ கழகத்துக்காக விளையாடிவரும் தினேஷ் சந்திமால் முச்சதம் அடித்து அசத்தினார்.

>> உள்ளூர் போட்டிகளில் அசத்தும் பட்டியிலில் இணைந்த ஷானக, தனன்ஜய

முதல்தரப் போட்டியில் தனது 2ஆவது இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்த சந்திமால், இலங்கை இராணுவ கழகம் சார்பில் முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இடம்பிடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் முதல்தரப் போட்டிகளில் 250 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிய 22ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

அதேநேரம், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் முதலாவது முச்சதத்தைப் பெற்றுக்கொண்ட அவர், முதல்தரப் போட்டிகளில் முச்சதத்தைப் பதிவுசெய்த 10ஆவது இலங்கை வீரராகவும் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், இம்முறை பருவகாலத்தில் 1000 ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரராக இடம்பிடித்த அவர், கடந்த 20 வருடங்களில் முதல்தரப் போட்டிகளில் இரண்டு தடவைகள் 1000 ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய சந்திமால், இலங்கையின் உள்ளூர் முதல்தரப் போட்டியில் 350 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட 3ஆவது வீரராக இடம்பிடித்தார்.

>> Video – சாதனைகளால் அமர்க்களப்படுத்திய Chandi, Dili & Jimmy…!|Sports RoundUp – Epi 129

எனவே, இந்தப் போட்டியில் 354 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அவர், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரராகவும் மாறினார்.

முன்னதாக கித்துருவன் விதானகே, 2015இல் இலங்கை விமானப்படை அணிக்கெதிராக 351 ஓட்டங்களைக் குவித்ததே சாதனையாக இருந்தது. எனினும், முதல்தரப் போட்டிகளில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீரராக மஹேல ஜயவர்தன உள்ளார்

அத்துடன், முதல்தரப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட உலகின் 12ஆவது வீரராகவும் அவர் சாதனை படைத்தார்.

இந்தப் பட்டியலில் பிரையன் லாரா (501*) முதலிடத்தையும், டொன் ப்ராட்மென் (452*), பாபாசஹிப் நிம்பால்கர் (443*) ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

>> லங்கன் ப்ரீமியர் லீக் தொடரின் திகதி அறிவிப்பு

எனவே சந்திமாலின் அதிரடி ஆட்டத்துடன் குறித்த போட்டியில் இலங்கை இராணுவ கழக அணி, தமது முதல் இன்னிங்ஸுக்காக 8 விக்கெட் இழப்புக்கு 642 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனிடையே, என்.சி.சி அணிக்கெதிராக கொழும்பு சி.சி.சி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கோல்ட்ஸ் கழக வீரர் டில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி முதல்தரப் போட்டிகளில் 800 விக்கெட் மைல்கல்லை எட்டினார்.

அத்துடன் முதல்தரப் போட்டிகளில் 800 விக்கெட் மைல்கல்லை எட்டிய 5 ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

2000ஆம் ஆண்டு முதல் முதல்தரப் போட்டிகளில் விளையாடி வருகின்ற 38 வயதான டில்ருவான் பெரேரா, இம்முறை பருவகாலத்தில் இதுவரை 41 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.

முதல்தரப் போட்டிகளில் 42 இன்னிங்ஸ்களில் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ள அவர், நான்கு தடவைகள் 10 விக்கெட் குவியல்களைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.

>> Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports RoundUp – Epi 128

இதேவேளை, குறித்த போட்டியில் என்.சி.சி அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லஹிரு உதார, இப்பருவாகலத்துக்கான உள்ளூர் முதல்தரப் போட்டியில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரராக இடம்பிடித்தார்.

27 வயதான ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லஹிரு உதார, இம்முறை உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் 9 ஆட்டங்களில் விளையாடி 3 சதங்கள், 6 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 1039 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்துள்ள வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்.

ராகம அணிக்கெதிராக நடப்பு பருவத்தில் அவர் குவித்த 290 ஓட்டங்களே அவரது அதிகூடிய முதல்தர ஓட்ட எண்ணிக்கையாகும்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய என்.சி.சி கழகம் முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 458 ஓட்டங்களைக் குவித்தது.

>> கொரோனாவினால் தள்ளிப்போகும் பாடசாலை விளையாட்டு நிகழ்ச்சிகள்

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல்ட்ஸ் கிரிக்கெட் கழக அணி, முதல் இன்னிங்ஸுக்காக 222 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸுக்காக 157 ஓட்டங்களையும் எடுத்தது

இதில் கோல்ட்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஞ்செலோ மெதிவ்ஸ், முதல் இன்னிங்ஸுக்காக 52 ஓட்டங்களை எடுத்திருந்ததுடன், உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் 9,000 ஓட்டங்கள் மைல்கல்லையும் எட்டினார்.

எனினும், இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 79 ஓட்டங்களால் என்.சி.சி கழகம் வெற்றியீட்டியது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<