கொரோனாவினால் தள்ளிப்போகும் பாடசாலை விளையாட்டு நிகழ்ச்சிகள்

217

நாட்டில் தற்போது நிலவி வருகின்ற கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பாடசாலைளிலும் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு எந்தவொரு விளையாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்துவதற்கு தடை விதிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இவ்வருடம் நிறைவடையும் வரை பாடசாலை மட்டத்திலான எந்தவொரு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறமாட்டாது என அனைத்து பாடசாலைகளுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தல் குறைவடையத் தொடங்கியதை அடுத்து நாட்டில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் நடவடிக்கை எடுத்திருந்தது.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா இரத்து

இந்த நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் வழமையான நேரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது.

இதனிடையே, பாடசாலைகள் திறக்கப்பட்ட காரணத்தால் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஆரம்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பாக, தேசிய ரீதியில் ஒருசில விளையாட்டுப் போட்டிகளை ஆரம்பிப்பபதற்கு சுகாதார அமைச்சு அனுமதி கொடுத்திருந்த நிலையில், பாடசாலை மட்டத்திலான போட்டிகளை ஏன் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என பாடசாலை பயிற்றுவிப்பாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக தமது தொழிலை முன்னெடுக்க முடியாமலும், அதற்கான சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமலும் பலதரப்பட்ட பயிற்சியாளர்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர்.

Video – உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்திய Anjelo & Bhanuka |Sports RoundUp – Epi 128

எனினும், கடந்த ஜுன் மாதம் முதல் கிரிக்கெட், கால்பந்து, ரக்பி உள்ளிட்ட ஒருசில விளையாட்டுக்களை மாத்திரம் சுகாதார வழிகாட்டலுடன் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் இளையோருக்கான கால்பந்தாட்டத் தொடரொன்றை நடத்துவதற்கும் மறுபுறத்தில் நீச்சல், கரப்பந்தாட்டம் உள்ளிட்ட தேசிய ரீதியிலான போட்டிகளை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டாலும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் குறையாத காரணத்தில் அவையனைத்தும் இரத்து செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

குறிப்பாக, பாடசாலை மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அடையாள அட்டை இல்லாத பயிற்சியாளர்களுக்கு 2022 முதல் தடை

இதனிடையே, எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை காரணமாக 17 வயதுக்குட்பட்ட மற்றும் 19 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கான போட்டிகளை நடத்துவது சாத்தியமல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. எனினும், அதற்கான அனுமதியை கல்வி அமைச்சு இதுவரை வழங்கவில்லை.

19 வயதுக்குட்பட்ட பிரிவினருக்காக நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் நாடாளவிய ரீதியில் இருந்து சுமார் 400 பாடசாலைகள் கலந்துகொள்ளதுடன், இதற்கான பயிற்சிகளை எதிர்வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதற்கும் திட்டமிடப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Video – விளையாட்டில் அரசியல் துடைத்தெறியப்படும்..! Namal Rajapaksa

இதனிடையே, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெரும் சமர்களை மீண்டும் செப்டம்பர் மாதத்தில் நடத்துவதற்கு ஒருசில பாடசாலைகள் தீர்மானித்திருந்தாலும், கல்வி அமைச்சின் தடை உத்தரவினால் அந்தத் தொடர்கள் இந்த வருடம் நடைபெறாது என செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட், கால்பந்து, ரக்பி மற்றும் மெய்வல்லுனர் உள்ளிட்ட விளையாட்டுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க