தனிப்பட்ட காரணத்தால் ஐ.பி.எல். தொடரிலிருந்து ரெய்னா விலகல்

227
Suresh Raina

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணத்திற்காக நாடு திரும்பி இருக்கும் நிலையில் அவர் இம்முறை ஐ.பி.எல். தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார். இதனை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ட்விட்டரில் அறிவித்துள்ளது.  

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற 33 வயதான ரெய்னா கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி சென்னை குழாத்துடன் துபாய் பயணித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு புறப்படுவதற்கு முன்னர் சென்னையில் நடத்தப்பட்ட ஐந்து நாள் முகாமில் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி, தீபக் சாஹர், சர்துல் தகூர், அம்பத்தி ராயுடு, எம். விஜய் மற்றும் பந்துவீச்சு ஆலோசகர் லக்ஷ்மிபதி பாலாஜியுடன் ரெய்னாவும் இணைந்திருந்தார்.   

ஐ.பி.எல் தொடருக்கான புதிய இலச்சினை வெளியீடு

சென்னை குழாம் கடந்த வாரம் முழுவதும் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் அந்த அணியின் சில வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதியான நிலையில் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் மூன்று முறை ஐ.பி.எல். சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ரெய்னா இல்லாதது பெரும் இழப்பாக மாறியுள்ளது. தோனிக்கு அடுத்து அந்த அணியின் முக்கிய வீரராக அவர் உள்ளார்.

கடந்த 12 பருவங்களிலும் சென்னை அணிக்காக 193 போட்டிகளில் ஆடியிருக்கும் ரெய்னா 5,368 ஓட்டங்களை பெற்றுள்ளார். 

ஐ.பி.எல். தொடருக்காக ஐக்கிய அரபு இராச்சியம் பயணமாகும் மஹேல ஜயவர்தன

சென்னை அணி வசம் பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு, ஷேன் வொட்சன் மற்றும் முரளி விஜய் ஆகிய முன்வரிசை வீரர்கள் இருந்தபோதும் ரெய்னா மூன்றாவது வரிசையில் ஓட்ட வேகத்தை அதிகரிப்பது அந்த அணிக்கு பெரும் பலமாக இருந்து வருகிறது. 

அவரது பந்துவீச்சும் சில நேரங்களில் அணிக்கு கைகொடுப்பதாக உள்ளது.

அதேபோன்று விராட் கோஹ்லியின் 5412 ஓட்டங்களுக்குப் பின்னர் ஐ.பி.எல். தொடரில் மொத்தம் 5368 ஓட்டங்களை பெறறிருக்கும் ரெய்னா அந்தத் தொடரில் இரண்டாவது அதிக ஓட்டங்கள் பெற்றவராகவும் உள்ளார். தொடர் வரலாற்றில் அதிக பிடியெடுப்புகளைச் செய்தவர் என்ற சாதனையும் அவர் வசமுள்ளது. அவர் இதுவரை 102 பிடியெடுப்புகளை எடுத்துள்ளார்