டெல்லி அணியின் மிச்சல் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று

Indian Premier League 2022

201

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் விளையாடிவரும் அவுஸ்திரேலிய சகலதுறை வீரர் மிச்சல் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிச்சல் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் தனிமைப்படுத்துள்ளப்பட்டுள்ளதாக அணியின் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம், வீரர்கள் அனைவருக்கும் இன்று (18) மற்றும் நாளை (19) கொவிட்-19 பரிசோதனைகள் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மீண்டும் சென்னை அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த தீக்ஷன!

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் எண்டிஜன் பரிசோதனையில் மிச்சல் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று இருப்பது அறியப்பட்டது. பின்னர், மாலை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் மார்ஷிற்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிச்சல் மார்ஷுடன் அணியின் மேலும் இரண்டு நபர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் உதவி ஊழியர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இவர்களின் பெயர்களை டெல்லி நிர்வாகம் இதுவரை அறிவிக்கவில்லை.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் உடற்கூறு நிபுனர் பெட்ரிக் பெர்ஹார்ட் ஏற்கனவே கொவிட்-19 தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில் அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார். இந்தநிலையில் தற்போது, மிச்சல் மார்ஷ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளை பெற்றுக்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி எதிர்வரும் 20 மற்றும் 22ம் திகதிகளில் முறையே பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எனினும், இதுவரை வீரர்கள் புனேவிற்கு புறப்படவில்லை என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், டெல்லி அணியின் அடுத்துவரும் போட்டிகள் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? என்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<