மீண்டும் சென்னை அணிக்காக பந்துவீச்சில் பிரகாசித்த தீக்ஷன!

Indian Premier League 2022

134

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன, குஜராத் டைட்டண்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அற்புதமாக பந்துவீசியிருந்தார்.

நேற்று (17) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கய்கவட்டின் (73 ஓட்டங்கள்) அரைச்சதத்துடன் 170 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணிக்கு எதிராக முகேஷ் சௌத்ரி முதல் ஓவரில் சுப்மான் கில்லை வெளியேற்றி சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தார்.

குறிப்பாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பலம் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுவந்த நிலையில், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பவர்-பிளே ஓவர்களில் மஹீஷ் தீக்ஷன பந்துவீசி சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு முதல் வெற்றியையும் பெற்றுக்கொடுத்திருந்தார். குறித்த போட்டியில் அவர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இவ்வாறான நிலையில், நேற்றைய போட்டியில் தன்னுடைய முதல் ஓவரில் விஜய் சங்கரின் விக்கெட்டினை கைப்பற்றினார். தொடர்ந்து பவர்-பிளே ஓவரில் அழைக்கப்பட்ட தீக்ஷன, அபினவ் மனோஹரின் விக்கெட்டினை வீழ்த்தி சென்னை அணிக்கு சிறந்த ஆரம்பத்தினை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார். இதன்காரணமாக 16 ஓட்டங்களுக்கு குஜராத் அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

பின்னர் மஹீஷ் தீக்ஷன தன்னுடைய 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றி பந்துவீச்சு இன்னிங்ஸை நிறைவுசெய்திருந்தார். இருப்பினும், ஏனைய பந்துவீச்சாளர் இன்னிங்ஸின் பிற்பகுதியில் மோசமாக பந்துவீச, டேவிட் மில்லர் மற்றும் ரஷீட் கானின் அபாரமான ஆட்டங்களால் குஜராத் அணி ஒரு பந்து மீதமிருக்க  7 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

எனவே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இந்தமுறை போட்டித்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. குஜராத் அணியானது 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<