வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள லசித் மாலிங்க

1182
Lasith Malinga

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து நட்சத்திரமான லசித் மாலிங்க, நாளை (ஜூலை 2) ஜிம்பாப்வே அணிக்கெதிராக காலி மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒரு நாள் போட்டியில் விளையாட மாட்டார் என அறியக்கிடைத்துள்ளது.

“ஒரு நாள் போட்டிகளில் 300ஆவது விக்கெட்டினை எட்டியிருக்கும் மாலிங்க, தற்போது வைரஸ் காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டிருக்கின்றார். வைத்திய அறிக்கைகளிற்கு அமைவாக, நாளைய போட்டியில் விளையாடாமல் அடுத்த 48 மணி நேரங்களிற்கு தொடர்ந்து ஓய்வினை எடுத்துக்கொள்ள மாலிங்கவிற்கு  ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது.”

என மாலிங்கவின் உடல்  சுகவீனம் தொடர்பான இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

களத்தடுப்பின் போதான எமது மனப்பாங்கில் மாற்றம் வேண்டும் : அஞ்செலோ மெதிவ்ஸ்

கடந்த 1992ஆம் ஆண்டு, நியூ பிளைமவுத் நகர மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக…

மாலிங்கவிற்கு ஒரு நாள் போட்டிகளில், 300 விக்கெட்டுக்களை எடுப்பதற்கு இன்னும் வெறும் 5 விக்கெட்டுக்கள் மாத்திரமே தேவையாக உள்ளது. இதுவரையில் இலங்கை சார்பாக 300 விக்கெட்டுக்களை கடந்த வீரர்களாக சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரிய ஆகியோர் மாத்திரமே காணப்படுகின்றனர். எனவே, மாலிங்க 300 விக்கெட்டுக்களை ஜிம்பாப்வே அணியுடனான இத் தொடர் மூலம் பெறுவாராயின் இலங்கை சார்பாக இந்த அடைவு மட்டத்தினை எட்டிய நான்காவது வீரராக தன்னை பதிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில், மாலிங்க 9 ஓவர்களினை வீசி 50 ஓட்டங்களினை கொடுத்து ஹமில்டன் மசகட்ஷாவின் விக்கெட்டினை மாத்திரம் கைப்பற்றியிருந்தார். தற்போது அணியில்  இவரது இழப்பிற்கு ஈடாக இளம் வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீர நாளைய போட்டியில் இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் மூலம், ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் ஆடத் தொடங்கியிருந்த மாலிங்க, அவரது மோசமான களத்தடுப்பிற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார். தான் விளையாடியிருந்த நான்கு போட்டிகளிலும் மூன்று முக்கிய பிடியெடுப்புக்களை தவறவிட்ட அவர், நேற்றைய போட்டியிலும் சோலமன் மிர்ரின் பிடியெடுப்பினை தவறவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மாலிங்க அணியில் இருந்து நாளைய போட்டியில் விலகுவதன் காரணமாக, இலங்கை அணிக் குழாத்தில் இணைக்கப்பட போகும் மேலதிக வீரர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், அது சுரங்க லக்மால் ஆக இருக்கும் என எமக்கு நம்பத்தகுந்த  வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

இடது கை விஷேட சுழல் பந்து வீச்சாளரான லக்ஷன் சந்தகனும் மாலிங்கவிற்கு ஏற்பட்டிருந்த இதே நோயின் காரணமாகவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் விளையாடாது போயிருந்தார். அவருக்கு நாளைய போட்டியில், 8.4 ஓவர்களிற்கு 77 ஓட்டங்களினை (ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில்) வாரி வழங்கியிருந்த அமில அபொன்சோவிற்கு பதிலாக அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது