ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் மீண்டும் ஒத்திவைப்பு

340
Asia Cup Postponed

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை 2022ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

1984 முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இதுவரை 14 தடவைகள் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி 7 தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று உள்ளது. இறுதியாக கடந்த 2018இல் நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சம்பியனாகத் தெரிவாகியது.

இந்த நிலையில், 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் T20 தொடர் கொரோனா வைரஸ் காரணமாக 2021 வரை ஒத்திவைக்கப்பட்டது

>> பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை உத்தேச குழாத்தில் புதுமுக வீரர்

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை நடத்த உரிமை பெற்றிருந்தது. எனினும், இந்தியாவுடனான அரசியல் முரண்பாடு, கொரோனா பரவல் உள்ளிட்ட ஒரு சில காரணத்தால் ஆசிய கிண்ணத்தை நடத்துவதற்கான வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டது.

ஆனால், கொரோனாவின் தாக்கம் மேலும் அதிகரித்து வந்ததால் ஆசிய கிரிக்கெட் பேரவை தனது டுவிட்டரில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்படுகிது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது

இதன்படி, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் இந்தாண்டும் குறித்த தொடரை நடத்த வாய்ப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

>> Video – செப்டம்பரில் இலங்கையில் ஆசிய கிண்ணம்? | AsiaCup2020

மறுபுறத்தில் எதிர்வரும் ஜுன் மாதம் ICCஇன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி விளையாடவுள்ளதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் அந்த அணி பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநடுவில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் அணியும் ஆசிய கிண்ணத்தில் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது

இந்த நிலையில், ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் 2022வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்தது.

>> சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பக்ஹர் ஷமானின் ஆட்டமிழப்பு

“சர்வதேச கிரிக்கெட் பேரவை, இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணம், 2022வரை பிற்போடப்பட்டுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ஏசிசி) ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆகிய விடயங்கள் தொடர்பாக ஆளுநர் சபை உறுப்பினர்களுடன் இணையவழியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷான் மானி தெளிவுபடுத்தினார்என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றை பார்த்து ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இந்த அறிவிப்பின் மூலம் இல்லாமல் போயுள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<