ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கே.எல்.ராஹுல் நீக்கம்!

123
KL Rahul

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கேஎல்.ராஹுல், பயிற்சியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கே.எல்.ராஹுலின் மணிக்கட்டு பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்துவரும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என இந்திய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

>> மீண்டும் அணியில் இணைந்த சகிப்: முதன்முறையாக மொர்டசா நீக்கம்

கே.எல். ராஹுலின் உபாதை குறித்த இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேஎல். ராஹுல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்ட போது, அவரது இடதுகை மணிக்கட்டில் உபாதை ஏற்பட்டுள்ளது. குறித்த இந்த உபாதையானது குணமடைய சுமார் மூன்று வாரங்கள் வரை எடுக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது கே.எல்.ராஹுல், மொஹமட் சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் உபாதைக்கான சிகிச்சையை பெற்றுவரும் நோக்கில் பெங்களூரில் உள்ள கிரிக்கெட் அக்கடமிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மொஹமட் சமி, துடுப்பெடுத்தாடும் போது, வலதுகையில் பந்து தாக்கியதில் உபாதைக்கு முகங்கொடுத்ததுடன், உமேஷ் யாதவ், கெண்டைக்கால் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டியின் பாதியில் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இந்தநிலையில், கே.எல்.ராஹுலின் உபாதை, இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ஒருவரை இழக்கச்செய்துள்ளது.

எவ்வாறாயினும் கே.எல்.ராஹுல் வெளியேறிய போதிலும், இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியுடன் இணைந்துள்ளார். அதேநேரம், வேகப் பந்துவீச்சாளர்களின் உபாதைகள் காரணமாக, தமிழக வீரர் T. நடராஜன் டெஸ்ட் குழாத்தில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (7) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<