மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கான் அதிரடி வீரர் சேர்ப்பு

Indian Premier League 2024

34

காயம் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய அவுஸ்திரேலியா அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர் குல்படின் நைப்பை டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் 17ஆவது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இம்முறை ஐபிஎல் தொடரில் ஆடிய பல முன்னணி வெளிநாட்டு வீரர்கள் காயம் மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகி வருவது அணிகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கான மாற்று வீரர்களை ஒவ்வொரு அணிகளும் அறிவித்து வருகிறது.

அந்தவகையில் தசைப்பிடிப்பால் சில போட்டிகளை தவறவிட்ட டெல்லி கெபிடல்ஸ் அணியின் அதிரடி சகலதுறை வீரர் மிட்செல் மார்ஷ், காயம் தீவிரமடைந்ததின் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகி மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா திரும்பினார்.

முன்னதாக ஏப்ரல் 03ஆம் திகதி நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது மிட்செல் மார்ஷ் காயத்தை சந்தித்தார். இதனையடுத்து, அவர் அடுத்தடுத்த போட்டிகளை தவறவிட்டார். அதன்பின் மிட்செல் மார்ஷ் தனது மேல் சிகிச்சைக்காக தாயகம் திரும்பிய நிலையில், தற்போதுவரை அவர் காயத்திலிருந்து குணமடையாத காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து அவர் விலகினார்.

இந்த நிலையில், மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் அணியின் சகலதுறை வீரர்  குல்படின் நைப்பை அடிப்படை விலையான 50 இலட்சத்துக்கு டெல்லி கெபிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் இந்தூர் மற்றும் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிகளில் இரண்டு அரைச் சதங்களை அடித்து குல்படின் நைப் அசத்தியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் தொடரில் முதல் தடவையாக இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக வலம் வருகின்ற 32 வயதான குல்படின் நைப், இதுவரை 65 T20i போட்டிகளில் விளையாடி 3 அரைச் சதம் உள்பட 807 ஓட்டங்களையும், 26 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<