வாழ்நாள் தடையினைப் பெறும் ஹொங்கொங் கிரிக்கெட் வீரர்கள்

230
©AFP

ஹொங்கொங் தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களான இர்பான் அஹ்மட் மற்றும் நதீம் அஹ்மட் ஆகியோர் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டது உறுதியானதை அடுத்து அவர்கள் இருவருக்கும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட வாழ்நாள் தடை விதித்துள்ளது. 

அதேநேரம், ஹொங்கொங் அணியின் மற்றுமொரு வீரரான ஹஸீப் அம்ஜட்டும் அதே ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து வருட போட்டித்தடையினை பெற்றிருக்கின்றார். 

பாக். அணியின் பயிற்சியாளர் பதவிக்கு மிஸ்பா உல் ஹக் விண்ணப்பம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் …….

இவர்களில் வாழ்நாள் தடையினை பெற்றிருக்கும் இரண்டு வீரர்களும் 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து நடைபெற்று வந்த பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதை இந்த வீரர்கள் மீது தீர்க்கமாக நடாத்தப்பட்ட விசாரணைகளின் மூலம் சர்வதேச கிரிக்கெட் வாரியம் உறுதி செய்திருக்கின்றது. 

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவின் முகாமையாளரான அலெக்ஸ் மார்ஷல் இந்த வீரர்கள் வாழ்நாள் தடையினைப் பெற்ற விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும் போது, அனுபவம் கொண்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் நீண்ட காலத்திற்கு ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டிருப்பது தீர்க்கமான ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார். 

அதோடு, மிகவும் கலந்தாலோசித்து எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த வீரர்களுக்கு வாழ்நாள் தடை கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அலெக்ஸ் மார்ஷல் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அலெக்ஸ் மார்ஷல், இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனைகள் ஏனைய கிரிக்கெட் வீரர்களும் எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்க முன்னுதாரணமாக இருக்கும் எனவும் கிரிக்கெட்டை ஊழல்கள் அற்ற விளையாட்டாக மாற்ற உதவும் எனவும் தெரிவித்திருந்தார்.  

தற்போது வாழ்நாள் தடையினை பெற்றிருக்கும் சகலதுறை வீரரான இர்பான் அஹ்மட் 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும், 8 T20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியிருப்பதோடு, சுழல் பந்துவீச்சாளரான நதீம் அஹ்மட் 25 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 24 T20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியிருக்கின்றார். 

அதேநேரம், ஐந்து வருட போட்டித் தடையினை பெற்றுள்ள வேகப் பந்துவீச்சாளரான ஹஸீப் அம்ஜாட் 7 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 18 T20 போட்டிகளிலும் ஆடியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<