அணித்தலைவர் பதவியிலிருந்து விலக தயாராக இருக்கும் லசித் மாலிங்க

141

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, இலங்கை T20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக உள்ளதாக கருத்து வெளியிட்டிருக்கின்றார்.  

லசித் மாலிங்க தலைமையில், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட இந்தியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணி, ஒரு போட்டி மழையினால் கைவிடப்பட குறித்த T20 தொடரை 2-0 எனப் பறிகொடுத்து நாடு திரும்பியது. அதேவேளை, இதற்கு முன்னர் கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட அவுஸ்திரேலியா சென்ற லசித் மாலிங்க தலைமையிலான இலங்கை அணி அத்தொடரையும் 3-0 எனப் பறிகொடுத்திருந்தது. 

இலங்கை அணியுடன் மீண்டும் இணையும் டொம் மூடி

இலங்கை கிரிக்கெட் அணியின் விசேட….

கடந்த 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வெல்லும் போது இலங்கை T20 அணியின் தலைவராக முதல் தடவையாக பொறுப்பேற்ற லசித் மாலிங்க, தொடர்ந்து 2016ஆம் ஆண்டு வரை இலங்கை T20 அணித்தலைவராக செயற்பட்டு வந்திருந்தார். பின்னர், 2018ஆம் ஆண்டில் இலங்கை T20 அணியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்ற அவர் நடைபெறவுள்ள 2020ஆம் ஆண்டின் T20 உலகக் கிண்ணம் வரை இலங்கை T20 அணியின் தலைவராக செயற்படுவார் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இவ்வாறான நிலையில் இலங்கை T20 அணியின் அண்மைய தொடர் தோல்விகளே லசித் மாலிங்க இலங்கை T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாராக இருப்பதற்கு காரணங்களாகக் கூறப்படுகின்றது.

வகுப்பு ஒன்றில் மாணவர்கள் சரி இல்லை என்றால் மாணவத்தலைவரை (Monitor) மாற்றி பிரயோசனம் இல்லை எனக் கூறிய லசித் மாலிங்க அவ்வாறு மாற்றம் வேண்டும் என்றால் மாணவத்தலைவர் மாற்றத்திற்கு தான் தயார் எனக் குறிப்பிட்டு ”நான் (அணித்தலைவர் பதவியினை) முடித்துக்கொள்ளத் தயார்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.  

அதேவேளை லசித் மாலிங்க, தற்போது உள்ள இலங்கை T20 அணி அனுபவம் குறைந்து காணப்படுகின்றது எனவும் தெரிவித்திருந்தார். 

”அணித்தலைவர் பதவியினைப் பொறுத்தவரை, எங்களிடம் அனுபவம் கொண்ட வீரர்கள் உள்ள போது நிலைமைகளை கையாள்வது, இலகுவான வேலையாக இருக்கும். இப்போது என்னிடம் அந்த வசதிகள் இல்லை. நான் 2014ஆம் ஆண்டில் (நான்) தலைவரான போது, என்னிடம் மஹேல, சங்கா, டில்ஷான், அஞ்செலோ (மெதிவ்ஸ்) எனப் போட்டியினை வெல்லக்கூடிய வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். இப்போது உள்ள வீரர்கள் அனுபவம் குறைந்தவர்களாக இருக்கின்றனர்.” 

”முன்னர், சங்கா, மஹேல மற்றும் டில்ஷான் ஆகியோர் இருந்தனர். அவர்களுக்கு  இன்னிங்ஸ் ஒன்றினை (எப்படி) உருவாக்குவது (என்பது) தெரியும். இப்போது உள்ள வீரர்கள் திறமையானவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அவர்களது துடுப்பாட்டப் பாணியினை வெளிப்படுத்த முயலும் போது பொறுமை அவசியம். ஆனால், (தற்போதைய இலங்கை T20 அணியில்) அது குறைவாக இருக்கின்றது.“  

அதேநேரம், இந்திய அணிக்கு எதிரான T20 தொடரில் தான் விக்கெட்டுக்கள் எதனையும் எடுக்க முடியாமல் போனது குறித்து கருத்து வெளியிட்ட லசித் மாலிங்க அனுபவம் கொண்ட வீரராக இருந்தும் அணிக்கு பங்களிப்புச் செய்யாமல் போயிருந்தது வருத்தம் தரும் விடயமாக இருந்தது எனக்  கூறியிருந்தார்.  

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்காக சகலதுறையிலும் அசத்திய டில்ஷான் முனவீர

இலங்கை கிரிக்கெட் சபை உள்ளூர் கழகங்கள்…

லசித் மாலிங்க இலங்கை T20 அணியின் பதவியிலிருந்து விலகும் சந்தர்ப்பத்தில், இலங்கை T20 அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரரான தசுன் ஷானக்க நியமிக்கப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

தசுன் ஷானக்க மூலம் கடந்த ஆண்டு வழிநடாத்தப்பட்ட இலங்கை T20 அணி, அப்போது T20 அணிகளின் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த பாகிஸ்தானை அவர்களது சொந்த மண்ணில் வைத்து இடம்பெற்ற T20 தொடரில் 3-0 என வைட்-வொஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<