பாகிஸ்தானுடன் இணையும் மோர்கல் ; மீண்டும் மிக்கி ஆர்தர்!

Pakistan Cricket

269

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்காவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்படவுள்ளார்.

மோர்னே மோர்கல் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ள நிலையில், அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் இணைந்துக்கொள்வார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹஸரங்கவின் முதலிடத்தை பறித்த ரஷீட் கான்!

மோர்னே மோர்கல் இதற்கு முதல் T20 உலகக்கிண்ணத்தில் நமீபியா அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும், SA T20 தொடரில் டர்பன்ஸ் சுபர் ஜயண்ட்ஸ் அணி பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அதுமாத்திரமின்றி கடைசியாக தென்னாபிரிக்காவில் நடைபெற்ற மகளிர் T20 உலகக்கிண்ணத்தில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார்.

மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியுடன் இணையவுள்ளதுடன், அந்த அணியின் முன்னாள் தலைமை பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர் ஆலோசகராக செயற்படவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. டெர்பிஷையர் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தொடர்ந்தும் செயற்பட்டவாறு, பாகிஸ்தான் அணியின் ஆலோசகராகவும் மிக்கி ஆர்தர் செயற்படவுள்ளார்.

அதேநேரம் தென்னாபிரிக்காவின் முன்னாள் வீரரான அன்ரூவ் புட்டிக் பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இவர் அடுத்த மாதம் பாகிஸ்தான் அணியுடன் இணைந்துக்கொள்ளவுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக அணியின் முன்னாள் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் கிராண்ட் பிராட்பர்ன் தொடர்ந்தும் செயற்படவுள்ளதுடன், உடற்கூறு நிபுனராக கிலிப் டிகோன் செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முழுநேர பயிற்றுவிப்பாளர்களான சக்லைன் முஷ்டாக் மற்றும் ஷோன் டைட் ஆகியோரின் பதவிக்காலங்கள் நிறைவுபெற்ற நிலையில், முழுநேர பயிற்றுவிப்பாளர்கள் இல்லாமல் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடியிருந்தது. குறித்த இந்த தொடரில் பாகிஸ்தான் அணி 1-2 என தோல்வியடைந்திருந்த நிலையில், அடுத்ததாக 5 T20I போட்டிகள் கொண்ட தொடருக்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<