புதிய டெஸ்ட் வீரர்களின் தரப்படுத்தலில் பாக். தென்னாபிரிக்க வீரர்களுக்கு முன்னேற்றம்

386
ICC Twitter

நிறைவடைந்த தென்னாபிரிக்க பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் மூலம் புதிய டெஸ்ட் தரப்படுத்தலில் அநேகமான வீரர்கள் தங்களின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதி உச்ச புள்ளிகளை பெற்றுள்ளனர்.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு தென்னாபிரிக்க அணியுடன் மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட மூவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகின்றது.

>>தீர்க்கமான போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி தேடித்தந்த கோஹ்லி, டோனி

இச்சுற்றுப்பயணத்தின் முதல் தொடரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் (14) நிறைவுக்கு வந்துள்ளது. டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 3-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணியை தென்னாபிரிக்க மண்ணில் வைத்து வைட்-வொஷ் செய்துள்ளது.

அடுத்த தொடரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (19) போர்ட் எலிசபத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான முற்கூட்டிய பயிற்சிகளில் ஈடுபடுவதற்காக இரு அணி வீரர்களும் போர்ட் எலிசபத் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது ஒவ்வொரு சுற்றுத்தொடர்கள் நிறைவடைந்ததன் பின்னர் அணிகள் மற்றும் அணி வீரர்களின் அடைவு மட்டங்களை தரவரிசை மூலம் நிரூபித்து வருகின்றது. அந்த அடிப்படையில் தற்போது டெஸ்ட் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய டெஸ்ட் அணிகள் மற்றும் அணி வீரர்கள் வரிசையில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை போன்றவற்றின் தரவரிசைகள் இன்று (15) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டது.

தொடரில் மொத்தமாக 24 விக்கெட்டுக்களை வீழ்த்தி தென்னாபிரிக்க அணியினுடைய வெற்றியில் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முழுமையான பங்காளராக மாறியிருந்த டுவன்னே ஒலிவியர் 8 நிலைகள் முன்னேறி 642 புள்ளிகளுடன் தற்போது 24 இடத்தை தொட்டுள்ளார். மேலும் அவரே தொடர் நாயகனாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் பெற்ற அதி உச்ச (642) புள்ளிகளும், அதி உயர் நிலையுமாகும்.

தென்னாபிரிக்க அணி சார்பில் புதிய தரவரிசைப்படி ஏனைய வீரர்கள் பெரிதாக பேசும் அளவுக்கு தரவரிசையில் இடம் பிடிக்கவில்லை. இருந்தாலும் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் தொடர்ந்தும் தென்னாபிரிக்க வீரர் ககிஸோ ரபாடாவே முதலிடத்தில் உள்ளார்.

>>இன்னிங்ஸ் தோல்வியினை தவிர்ப்பதில் வெற்றி கண்டிருக்கும் இலங்கை A அணி

மேலும் தென்னாபிரிக்க அணியின் அடுத்த வேகப்பந்து வீச்சாளரான வேர்னன் பிலாண்டர் தரவரிசையில் அசைவுகள் இன்றி தொடர்ந்தும் மூன்றாமிடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்கள் சார்பாக பந்துவீச்சில் தொடரில் 16 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹமட் அமிர் 3 நிலைகள் முன்னேறி 31ஆவது இடத்தில் உள்ளார்.

இறுதி போட்டியில் 6 விக்கெட்டுக்களை பதம்பார்த்த பஹீம் அஷ்ரப் 48 நிலைகள் முன்னேறி 58ஆவது இடத்திலும், சுழல் பந்துவீச்சாளர் சதாப் கான் 23 நிலைகள் முன்னேறி 78ஆவது இடத்திலும் உள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதி உச்ச புள்ளிகளை (முறையே 292, 202) அடையும் சந்தர்ப்பம் நிறைவுற்ற தொடரில் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

புதிய டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் காணப்படும் வீரர்கள் பின்வருமாறு,

  1. ககிஸோ ரபாடா (தென்னாபிரிக்கா) – 882 புள்ளிகள்
  2. ஜேம்ஸ் அண்டர்சன் (இங்கிலாந்து) – 874 புள்ளிகள்
  3. வேர்னன் பிலாண்டர் (தென்னாபிரிக்கா) – 809 புள்ளிகள்
  4. பெட் கம்மிண்ஸ் (அவுஸ்திரேலியா) – 804 புள்ளிகள்
  5. ரவீந்திர ஜடேஜா (இந்தியா) – 794 புள்ளிகள்

புதிய தரவரிசையின் பிரகாரம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் தென்னாபிரிக்க அணி சார்பாக மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்ட குயின்டன் டி குக் 12 நிலைகள் முன்னேறி 683 புள்ளிகளுடன் தற்போது 14ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.

மேலும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஷிம் அம்லா 3 நிலைகள் முன்வந்து தற்சமயம் 10ஆவது இடத்தில் உள்ளார். அத்துடன் மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மர்க்ரம் 2 நிலைகள் முன்வந்து தற்போது 8ஆவது இடத்தில் உள்ளார்.

துடுப்பாட்ட தரவரிசையில் பாகிஸ்தான் வீரர்கள் சார்பாக தொடரில் மொத்தமாக 325 ஓட்டங்களை குவித்த பாபர் அசாம் 5 நிலைகள் முன்னேறி தற்போது டெஸ்ட் வாழ்க்கையில் அதி உச்ச புள்ளிகளையும் (658) அதி உச்ச நிலையையும் (20) அடைந்துள்ளார். மேலும் அஸாட் சபீக் ஒரு நிலை முன்னேறி 23ஆவது இடத்தில் உள்ளார்.

>>இலங்கையில் ஐ.சி.சி ஊழல் மோசடி அலுவலகம் நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அர்ஜூன

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான இமாம் உல் ஹக் 23 நிலைகள் முன்னேறி 73ஆவது இடத்திலும், மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஷான் மசூத் 2 நிலைகள் முன்னேறி 63ஆவது இடத்திலும் உள்ளனர். அத்துடன் இவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அதி உச்ச புள்ளிகளை (முறையே 433, 470) அடையும் சந்தர்ப்பம் நிறைவுற்ற தொடரில் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

புதிய டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் காணப்படும் வீரர்கள் பின்வருமாறு,

  1. விராட் கோஹ்லி (இந்தியா) – 922 புள்ளிகள்
  2. கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து) – 897 புள்ளிகள்
  3. சடீஸ்வர் புஜாரா (இந்தியா) – 881 புள்ளிகள்
  4. ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா) – 874 புள்ளிகள்
  5. ஜோ ரூட் (இங்கிலாந்து) – 807 புள்ளிகள்

தென்னாபிரிக்க பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் முடிவுகளுக்கு அமைய வைட்-வொஷ் செய்த தென்னாபிரிக்க அணி 4 புள்ளிகளை மேலதிகமாக பெற்று மொத்தமாக 110 புள்ளிகளுடன் டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தலில் 5ஆவது இடத்திலிருந்து 2ஆவது இடத்திற்கு திடீர் முன்னேற்றம் அடைந்துள்ளது.

மேலும் வெள்ளையடிப்புக்கு உள்ளான பாகிஸ்தான் அணி 4 புள்ளிகளை இழந்து 6ஆவது இடத்திலிருந்து 88 புள்ளிகளுடன் 7ஆவது இடத்திற்கு பின்னிறங்கி உள்ளது. இதன் மூலம் 91 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணிக்கு 6ஆவது இடத்திற்கு முன்னேறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொடரின் பின்னரான புதிய டெஸ்ட் அணிகளின் தரப்படுத்தல்

  1. இந்தியா – 116 புள்ளிகள்
  2. தென்னாபிரிக்கா – 110 புள்ளிகள்
  3. இங்கிலாந்து – 108 புள்ளிகள்
  4. நியூஸிலாந்து – 107 புள்ளிகள்
  5. அவுஸ்திரேலியா – 101 புள்ளிகள்
  6. இலங்கை – 91 புள்ளிகள்
  7. பாகிஸ்தான் – 88 புள்ளிகள்
  8. மேற்கிந்திய தீவுகள் – 70 புள்ளிகள்
  9. பங்களாதேஷ் – 69 புள்ளிகள்
  10. ஜிம்பாப்வே – 13 புள்ளிகள்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<