இலங்கை வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

India Women's Tour of Sri Lanka 2022

73
India Women's Tour of Sri Lanka 2022
 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (26) வெளியிட்டுள்ளது. இதில் 2022-25 ICC மகளிர் சம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக ஒருநாள் தொடர் அமையவுள்ளது.

ICC மகளிர் சம்பியன்ஷிப்பின் (2022-25) அடுத்த அத்தியாயத்தில் களமிறங்கும் அணிகள் மற்றும் குழுக்கள் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

இதன்படி, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் முதலாவது தொடர் ஜூன் மாதம் முதலாம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவுள்ளது. பாகிஸ்தான் தவிர இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை அணி விளையாடவுள்ளது.

மேலும், ICC மகளிர் சம்பியன்ஷிப்பின் கீழ் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக இலங்கையில் விளையாடவுள்ளது.

இதனிடையே, இலங்கை – இந்திய மகளிர் அணிகள் மோதும் தொடருக்கான போட்டி அட்டவணை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 18ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் ஜூன் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், T20 தொடர் ஜூலை 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 7ஆம் திகதி நடைபெறவுள்ள கடைசி T20 போட்டியுடன் நிறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் பொதுநலவாய விளையாட்டு விழா எதிர்வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் மகளிருக்கான கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதுடன், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ‘A’ பிரிவில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படோஸுடன் இடம்பெற்றுள்ளது.

எனவே, பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான முன் ஆயத்தமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் அமையவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<