பாடசாலைகள் மெய்வல்லுனர் இரண்டாம் நாளில் மேலும் 11 சாதனைகள் முறியடிப்பு

408

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்ற 34 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் 2 ஆவது நாளான இன்று (02) மேலும் 11 புதிய போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இதில் மைதான நிகழ்ச்சிகளில் இன்றைய தினமும் பிரகாசித்திருந்த வட மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த வீரர்கள் 3 வெள்ளி மற்றும் ஓரு வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்ததுடன், 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் மாவட்டம் பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட், முன்னணி பாடசாலை வீரர்களையெல்லாம் பின்தள்ளி புதிய போட்டிச் சாதனையுடன் முதல் தடவையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

அகில இலங்கை பாடசாலை விளையாட்டில் வட மாகாண வீரர்களுக்கு மூன்று பதக்கங்கள்

12, 14, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவுகளில் நடைபெறுகின்ற இம்முறைப் போட்டித் தொடரின் முதல் நாளில் 3 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன. இது இவ்வாறிருக்க போட்டிகளின் இரண்டாவது நாளான இன்றைய தினம் 22 நிகழ்ச்சிகளின் இறுதிப் போட்டிகள் நடைபெற்றதுடன், போட்டிகளின் முடிவில் 11 போட்டிச் சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

இதில் மைதான நிகழ்ச்சிகளில் 4 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. இன்று காலை நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் 55.58 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்ததன் மூலம் கொழும்பு புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கு கொண்ட கொழும்பு பௌத்த மகளிர் கல்லூரி மாணவி கே. குருகுலசூரிய 10.05 மீற்றர் தூரத்தையும், அதே வயதுப் பிரிவில் பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் பங்கு கொண்ட நீர்கொழும்பு ஆவே மரியாள் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியைச் சேர்ந்த மிலானி ரொமேகா 5.07 மீற்றர் தூரத்தையும் பாய்ந்து புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தினர்.

இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் பங்கு கொண்ட மஹவ விஜயபா தேசிய பாடசாலையைச் சேர்ந்த எல். பண்டார 15.67 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவட்டு நிகழ்ச்சிகளில் 7 சாதனைகள்

இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் 100 மீற்றர் இறுதிப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றன.

இதில் 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட ஹென்னத்தோட்டை வித்யாவர்தன மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அயேஷ் மிஹிரங்க (11.26 செக்.), 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரஸ்னி அஹமட், (11.16 செக்.) ஆகியோர் ஆண்கள் பிரிவில் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.

தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் “குட் ஸ்போர்ட்ஸ்” சஞ்சிகை வெளியீடு

இதேநேரம், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் சிலாபம் விஜய கடுபொத மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஷசினி பாக்யா தெவ்மினி (13.88 செக்.), 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட தெஹிவளை அலீதீயா சர்வதேசப் பாடசாலை மாணவி தினாரா பண்டார தாலா (12.65 செக்.), 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு கொண்ட பெந்தர காமினி மத்திய கல்லூரி மாணவி செல்ஸி மெலனி பெந்தரகே (12.27 செக்.) ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இன்று மாலை நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் நாவலப்பிட்டிய அநுருத்த குமார தேசிய பாடசாலையைச் சேர்ந்த எம்.டி விஜேரத்ன, 4 நிமிடங்கள் 05.57 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

இதேவேளை, 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 200 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்கு கொண்ட கோட்டை ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த எஸ். ஏதிரிசிங்க, 25.68 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

வட மாகாணத்துக்கு மேலும் 4 பதக்கங்கள்

கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகின்ற மைதான நிகழ்ச்சிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வட மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மேலும் 4 பதக்கங்களை வென்றனர்.

இன்று காலை நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்கு கொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 50.83 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 55.58 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இறக்குவாணை ரத்னாலோக மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ். நிமந்த 49.51 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

எனினும், கடந்த மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற ஜோர்ன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதிவட்டம் எறிதலில் பங்கு கொண்ட மிதுன்ராஜ், 53.79 மீற்றர் தூரத்தை எறிந்து முன்னைய போட்டி சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும், புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 61.67 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

FA கிண்ண 16 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

இதேநேரம், 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்கு கொண்ட யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி வி. சாத்விகா, 3.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அத்துடன், 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் மகாஜனா மாணவி சி. ஹெரீனா 1.55 மீற்றர் உயரம் தாவி வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார். கடந்த மாதம் நடைபெற்ற ஜோர்ன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் இதே போட்டியில் ஹெரீனா வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் மன்னார் கொண்டச்சி .மு. பாடசாலை மாணவன் ஜெனுசன் பீரிஸ் (6.59 மீற்றர்) வெண்கலப் பதக்கம் வென்றார்.

அஹமட்டுக்கு முதல் தங்கம்

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பொல்கஹவெல அல் – இர்பான் மத்திய கல்லூரி மாணவன் ரஸ்னி அஹமட், புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். குறித்த போட்டியை நிறைவு செய்ய 11.16 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, 2014 ஆம் ஆண்டு கொழும்பு புனித பெனடிக் கல்லூரியைச் சேர்ந்த ஷெஹான் டி ராஜபக்ஷ மாணவனால் (11.24 செக்.) நிலைநாட்டிய சாதனையை சுமார் 4 வருடங்களுக்குப் பிறகு அவர் முறியடித்தார்.

எனினும், குறித்த போட்டியில் வெற்றிபெறக்கூடியவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிருஷ ஹஷேன் 11.18 செக்கன்களில் போட்டித் தூரத்தைக் கடந்து முந்தைய போட்டிச் சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும், காலி மஹிந்த கல்லூரியின் எச்.எஸ் மல்வேன்ன (11.34 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்த நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் இதே மைதானத்தில் நடைபெற்ற சேர். ஜோர்ன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் இந்த மூன்று வீரர்களும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.

எனினும், குறித்த போட்டியை 11.51 செக்கன்களில் நிறைவு செய்த புனித பேதுரு கல்லூரி மாணவன் ஹிருஷ ஹஷேன் வர்ண சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், காலி மஹிந்த கல்லூரியின் எச்.எஸ் மல்வேன்ன 11.53 செக்கன்களில் போட்டியை முடித்து வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தனர். எனினும், 11.68 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்த ரிஸ்னி அஹமட்டுக்கு 5 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

சபியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

கடந்த 5 வருடங்களாக பாடசாலை மட்டப் போட்டிகளில் பெண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்ற கண்டி விஹாரமஹாதேவி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த பாத்திமா சபியா யாமிக், இன்று நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியை நிறைவு செய்ய 12.23 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், இவ்வருடம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியிலும் 2 ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட சபியா, கடந்த மே மாதம் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை அணியிலும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எந்த தோல்வியுமின்றி இளையோர் ஆசியக் கிண்ண அரையிறுதியில் இலங்கை

இதேவேளை, குறித்த போட்டியில் தெற்காசியாவின் அதிவேக வீராங்கனையான கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியைச் சேர்ந்த அமாஷா டி சில்வா, போட்டியை 12.18 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

அரவிந்தனுக்கு இரண்டாமிடம்

20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த பதுளை சரஸ்வதி தேசிய கல்லுரியைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன், நான்கு நிமிடமும் 01.18 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து வர்ண சாதனையுடன் வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேநேரம், குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரியின் இசுரு லக்‌ஷான் (4 நிமி. 00.94 செக்.) தங்கப் பதக்கத்தையும், மாகந்துர மத்திய கல்லூரியின் சசிந்து சங்கல்ப (4 நிமி. 01.20 செக்.) வெண்கலப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.

34 ஆவது தடவையாகவும் நடைபெற்றுவருகின்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் மூன்றாவது நாள் போட்டிகள் நாளை (03) நடைபெறவுள்ளது.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<