அற்புத பந்துவீச்சால் மும்பை அணிக்கு அழுத்தம் கொடுத்த சமீர

Indian Premier League 2022

682

IPL தொடரில் நேற்று (24) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராஹுல் தலைமையிலான லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி இலகுவான வெற்றியினை பதிவுசெய்தது.

இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று மோசமான சாதனையை தம்வசப்படுத்தியுள்ளதுடன், தொடரிலிருந்து முதலில் எலிமினேட் ஆகும் அணியாகவும் மாறியுள்ளது.

மேஜர் கழக வளர்ந்துவரும் அணிகளுக்கான தொடரின் சம்பியனாகிய தமிழ் யூனியன்

குறிப்பிட்ட இந்தப்போட்டியில் இலங்கை அணி சார்பாக வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர, லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

துஷ்மந்த சமீர கடந்த சில போட்டிகளில் ஓரிரு விக்கெட்டுகளை மாத்திரம் வீழ்த்திவந்த நிலையில், ஓட்டங்களையும் அதிகமாக எதிரணிகளுக்கு விட்டுக்கொடுத்திருந்தார்.

எனினும் நேற்றைய போட்டியில் அற்புதமாக பந்துவீசிய துஷ்மந்த சமீர 4 ஓவர்கள் பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும், வெறும் 14 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்திருந்தார். இதில் மொத்தமாக 24 பந்துகளில் 15 பந்துகளை ஓட்டமற்ற பந்துகளாகவும் வீசிய இவர் ஒரே ஒரு பௌண்டரியை மாத்திரம் விட்டுக்கொடுத்திருந்தார்.

அணியின் 2வது ஓவரை வீசிய சமீர ஒரு ஓட்டத்தை மாத்திரம் வழங்கியதுடன், மீண்டும் 4வது ஓவருக்கு அழைக்கப்பட்டு 5 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து 13வது ஓவரை வீச அழைக்கப்பட்ட இவர் குறித்த ஓவரில் 3 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுக்க, முக்கியமான 19வது ஓவரை கீரன் பொல்லாரட் மற்றும் டேனியல் சேம்ஸிற்கு எதிராக வீசி 5 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தார். இதில், 19வது ஓவரில் அற்புதமான வைட் யோர்க்கர் பந்துகளை சமீர வீசியிருந்தார்.

மும்பை அணிக்கு எதிரான இந்த போட்டியை பொருத்தவரை, கே.எல்.ராஹுலின் இரண்டாவது சதத்தின் உதவியுடன் (103 ஓட்டங்கள்) லக்னோவ் அணி 168 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<