கோஹ்லி மற்றும் நியூசிலாந்து அணிக்கு ஐ.சி.சி அபராதம்

1569
Image - Getty Image

ஆட்டமிழப்பு கோரி நடுவருடன் முரண்பட்ட காரணத்தினால் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீத அபராத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியையும் தண்டனையாக வழங்கியுள்ளது.

தற்சமயம் நடைபெற்று வருகின்ற உலகக்கிண்ண தொடரின் 28ஆவது லீக் போட்டியானது நேற்று (22) இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் சௌத்தம்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டத்தில் குறைந்த ஓட்டங்களை பெற்றிருந்தாலும், பந்துவீச்சில் மிகச்சிறப்பாக செயற்பட்டு 11 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது.

உலகக் கிண்ணத் தொடரில் தோல்வியடையாத அணியாக முன்னேறும் இந்தியா

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 29…..

குறித்த போட்டியில் இந்திய அணி குறைந்த ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது. வெற்றி இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடும் போது விராட் கோஹ்லி கடும் ஆக்ரோஷமாக களத்தடுப்பில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 28 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்தது. இந்த நேரத்தில் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு ஆப்கானிஸ்தான் அணியின் விக்கெட்டுக்களை வீழ்த்துவதற்கான தேவைப்பாடு மிக முக்கியமாக காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் 29ஆவது ஓவரை வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா வீசினார். ரஹ்மத் ஷாஹ் முதல் பந்தை எதிர்கொண்டார். இப்பந்தானது ரஹ்மத் ஷாஹ்வின் காலில் பட விராட் கோஹ்லி உள்ளிட்ட  அரைவட்டத்திற்குள்ள இருந்த அனைத்து இந்திய வீரர்களும் நடுவரிடம் LBW ஆட்டமிழப்பு கோரினார்கள். ஆனால் நடுவர் அலீம் தார் ஆட்டமிழப்பு இல்லை என அறிவித்தார். இந்நேரத்தில் இந்திய அணிக்கு மீள்பரிசீலனை செய்யும் வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் போது அணித்தலைவர் விராட் கோஹ்லி நடுவரின் சைகைக்கு பின்னரும் நீண்ட நேரம் ஆட்டமிழப்பு கோரினார். பின்னர் ஆவேசமடைந்த கோஹ்லி, நடுவர் அலீம் தாரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டி முடிவுற்றதன் பின்னர் விராட் கோஹ்லியின் நடத்தை தொடர்பில் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட கிறிஸ் போர்ட்டிடம் புகார் செய்யப்பட்டது.

ஆப்கானுக்கு எதிராக கடுமையாகப் போராடி வெற்றியீட்டினோம்: கோஹ்லி

உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தானுக்கு….

இதன் காரணமாக கோஹ்லிக்கு ஐ.சி.சி இன் 2.1 சரத்தில் குறிப்பிடும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவீத அபராத தொகையும், ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. இது கோஹ்லிக்கு வழங்கப்பட்ட குறைந்த பட்ச தண்டனையாகும். இதற்கு வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனை போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், இரண்டு தகுதி இழப்பீட்டு புள்ளிகளுமாகும்.

மேலும் 2016ஆம் ஆண்டு இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல் இது விராட் கோஹ்லிக்கு விதிக்கப்படும் இரண்டாவது தகுதி இழப்பீட்டு புள்ளியாகும். முதல் தகுதி இழப்பீட்டு 2018 ஜனவரியில் தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விதிக்கப்பட்டது.

கோஹ்லி மீதான குறித்த குற்றச்சாட்டானது போட்டியின் கள நடுவர்களான அலீம் தார் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வோர்த், மூன்றாம் நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போர்க் மற்றும் மேலதிக நடுவரான மிட்சல் கொஹ் ஆகியோரினால் சுட்டிக்காட்டப்பட்டு, போட்டியின் மத்தியஸ்தரான கிறிஸ் போர்ட் மூலமாக ஐ.சி.சி இனால் இவ்வாறு அபராதமும், தகுதி இழப்பீட்டு புள்ளியும் விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியின் அபராதம்

குறைந்த பந்துவீச்சு பிரதி வேகத்தை கொண்டதன் காரணமாக நியூஸிலாந்து அணிக்கும் அதன் அணித்தலைவருக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண தொடரின் 29ஆவது லீக் போட்டி நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று (22) மென்செஸ்டரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றது.

ப்ராத்வைட் சதமடித்தும் மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட மே.தீவுகள்

நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள்….

இந்த போட்டியின் போது இரண்டாவதாக பந்துவீசிய நியூசிலாந்து அணி 49 ஓவர்கள் வீசிய நிலையில் போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த 49 ஓவர்கள் வீசுவதற்கான நேரத்தில் ஒரு ஓவர் குறைவாக வீசியிருந்தது. இதனால் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் உட்பட ஏனைய பத்து வீரர்களுக்கும் ஐ.சி.சி யினால்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி இனுடைய இலக்கம் 2.22 சரத்தில் குறிப்பிடும், அணித் தலைவர்கள் மற்றும் வீரர்களினுடைய நடத்தை மற்றும் அவர்கள் சார்ந்த கோட்பாடுகளை உள்ளடக்கும் சரத்தின்படி இவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரு ஓவரை வீச மேலதிக நேரம் எடுத்தமையினால், வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் என்ற அடிப்படையிலும், குறித்த அணியின் தலைவருக்கு அதன் இரட்டிப்பு அபராதம் என்ற அடிப்படையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சனுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீத அபராத தொகையும், ஏனைய பத்து வீரர்களுக்கும் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராத தொகையும் ஐ.சி.சி இனால் விதிக்கப்பட்டுள்ளது.

கார்லோஸ் ப்ராத்வைட்டின் துடுப்பாட்டத்தை பாராட்டிய ஜேசன் ஹோல்டர்

மன்செஸ்டர் நகரில் நேற்று (22) இடம்பெற்று…..

இதனை குறித்த போட்டியின் கள நடுவர்களான இயன் கோல்ட் மற்றும் ருச்சிர பள்ளியகுருகே, மூன்றாம் நடுவர் நைஜல் லோங் மற்றும் நான்காம் நடுவர் ரொட் டகர் ஆகியோர் உறுதிப்படுத்த, குறித்த போட்டியின் மத்தியஸ்தரான டேவிட் மூலமாக ஐ.சி.சி இனால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் அணித்தலைவவர் கேன் வில்லியம்சன் குறித்த குற்றச்சாட்டினை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேலதிக விசாரணைகள் எதற்கும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், இத்தொடரில் இவ்வாறான குறைந்த பந்துவீச்சுப் பிரதி கேன் வில்லியம்சன் தலைமையில் மீண்டும் பதிவு செய்யப்படுமானால் அவருக்கு போட்டித் தடை விதிக்கப்படும் என்பதையும் ஐ.சி.சி தெளிவுபடுத்தியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<