சமநிலையில் முடிவடைந்த 18ஆவது ‘வீரர்களின் சமர்’

607

வடக்கின் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளைக் கொண்ட பாடசாலைகளான யாழ். மகாஜனாக் கல்லூரி மற்றும் ஸ்கந்தவரோதயா கல்லூரி ஆகியவற்றுக்கிடையிலான 18ஆவது “வீரர்களின் சமர்“ கிரிக்கெட் பெரும் போட்டி (BIG MATCH) சமநிலையில் முடிவடைந்துள்ளது.

வீரர்களின் சமரில் ஆதிக்கம் செலுத்தும் மகாஜனாக் கல்லூரி

வெள்ளிக்கிழமை (23) மகாஜனாக் கல்லூரியின் சொந்த மைதானத்தில் தொடங்கியிருந்த இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டியின், முதல் நாளின் முடிவில் மைதான சொந்தக்காரர்களினால் முதலில் துடுப்பாட பணிக்கப்பட்டிருந்த ஸ்கந்தவரோதயாக் கல்லூரி முதல் இன்னிங்சில் 233 ஓட்டங்களைப் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பின்னர் தங்களது முதல் இன்னிங்சில் ஆடியிருந்த மகாஜனாக் கல்லூரி அணியினர் 92 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து உறுதியான நிலையொன்றில் காணப்பட்டிருந்தனர். களத்தில் நதீஷன் ஜனுஷன் 33 ஓட்டங்களோடும், மஹேஷ்வரன் பகீரதன் 4 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (24) தொடர்ந்தது. இன்றைய நாளில் 141 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இன்னிங்சை நம்பிக்கையுடன் தொடர்ந்த மகாஜனாக் கல்லூரி ஆட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே நான்காம் இலக்க துடுப்பாட்ட வீரரான பகீரதனின் விக்கெட்டை அவர் 7 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பறிகொடுத்திருந்தது.

எனினும், ஜனுஷன் மகாஜனாக் கல்லூரியின் மத்திய வரிசையை அரைச்சதம் ஒன்றின் மூலம் அணித்தலைவர் தயுஸ்டனோடு இணைந்து வலுப்படுத்தியிருந்தார். இப்படியாக இரண்டு வீரர்களும் தமது தரப்புக்கு சிறந்த அத்திவாரம் ஒன்றை உருவாக்க முற்பட்டிருந்த வேளையில் தயுஸ்டனின் விக்கெட் ஸ்கந்தவரோதயா வீரர் ஸ்ரீரஞ்சன் டிலுக்சனின் சுழலில் பறிபோனது. இதனால், மகாஜனா அணியின் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 42 ஓட்டங்களை பகிர உதவியிருந்த தயுஸ்டன் 28 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்திருந்தார்.

இதனையடுத்து சிறிது நேரத்தில் அரைச்சதம் கடந்த ஜனுஷனின் விக்கெட்டும் வீழ்ந்தது. வலதுகை துடுப்பாட்ட வீரரான ஜனுஷன் 7 பவுண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை மகாஜனாக் கல்லூரிக்காக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனுஷனின் விக்கெட்டை அடுத்து பின்வரிசை வீரர்களில் மகாஜனாக் கல்லூரியின் பிரதி தலைவர் மஹேந்திரன் சுஜீபன் மாத்திரமே இருபது ஓட்டங்களைக் கடந்திருந்தார். ஏனைய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களுக்கு ஓய்வறை நடக்க முடிவில், 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து முதல் இன்னிங்சில் 225 ஓட்டங்களை மகாஜனாக் கல்லூரி பெற்றுக் கொண்டது.

மகாஜனாக் கல்லூரியின் பின்வரிசை துடுப்பாட்டத்திற்கு அழுத்தங்கள் தந்த ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பந்துவீச்சில் டிலுக்ஷன் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் செல்லத்துரை சோபிதன், செளந்தராஜன் தன்சன் மற்றும் அருட்செல்வம் தனுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இம்முறையும் சமநிலையில் முடிந்த ‘சகோதரர்களின் சமர்’

மகாஜனாக் கல்லூரியின் முதல் இன்னிங்சை அடுத்து 8 ஓட்டங்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய ஸ்கந்தவரோதயா கல்லூரி நல்லதொரு ஆரம்பத்தை தந்திருந்த போதிலும் பின்னர் ஓட்டங்கள் சேர்க்க தடுமாறியிருந்தது.

ஓட்டங்கள் சேர்ப்பதில் சிரமத்தை எதிர்கொண்ட ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் விக்கெட்டுக்களும் துரித கதியில் பறிபோயிருந்தன. இதனால் இரண்டாம் இன்னிங்சில் 60 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த ஸ்கந்தவரோதயா கல்லூரி 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்திருந்த கணேஷமூர்த்தி நிகர்ஜன் 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

மகாஜனாக் கல்லுரியின் பந்துவீச்சில் சுஜீபன் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்கந்தவரோதயா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட, போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இந்த ஆண்டுக்கான வருடாந்த சமர் சமநிலை அடைந்த காரணத்தினால், வீரர்களின் சமர் கிரிக்கெட் தொடர் நடப்பு சம்பியனாக 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் சம்பியன் பட்டத்தை சூடியிருந்த மகாஜனாக் கல்லூரி நீடிக்கின்றது.

விருதுகள்

  • சிறந்த களத்தடுப்பாளர் – பிரோஷன் (ஸ்கந்தவரோதயா கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் – தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)
  • போட்டியின் ஆட்ட நாயகன்–தங்கராசா தயுஸ்டன் (மகாஜனாக் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் – நதீஷன் ஜனுசன் (மகாஜனாக் கல்லூரி)
  • சிறந்த சகலதுறை வீரர் – மஹேந்திரன் சுஜீபன் (மகாஜனாக் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

ஸ்கந்தவரோதயா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 233 (69.1) – பாஸ்கரன் அஜிந்தன் 55, கணேஷமூர்த்தி நிகர்ஜன் 38, தங்கராசா தயுஸ்டன் 70/7(19.1)

மகாஜனாக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 225 (59.3) – நதீஷன் ஜனுசன் 57, தங்கராசா தயுஸ்டன் 29, மஹேந்திரன் சுஜீபன் 28, ஸ்ரீரஞ்சன் டிலுக்ஷன் 39/3(09)

ஸ்கந்தவரோதயா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 134 (60)– கணேஷமூர்த்தி நிகர்ஜன் 34, செல்லத்துரை சோபிதன் 19, மஹேந்திரன் சுஜீபன் 34/5(14)

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.