தினேஷ் கார்த்தின் அதிரடியை மீறி வென்றது அவுஸ்திரேலியா

573

அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது T20I  போட்டியில் தினேஷ் கார்த்தின் அபார துடுப்பாட்டத்தையும் மீறி, அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

டி20 தொடரை வைட் வொஷ் செய்த இந்திய அணி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று…

டக்வர்த் லூவிஸ் முறைப்படி அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 174 (17) என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 17 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றதுடன், நான்கு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. இதன்படி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி மந்தமான ஓட்ட வேகத்துடன் ஓட்டங்களை பெற்றது.

டி ஆர்சி ஷோர்ட்டின் ஆட்டமிழப்பின் பின்னர் அணித் தலைவர் ஆரோன் பின்ச் உடன் இணைந்த கிரிஸ் லின், கலீல் அஹமட்டின் ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அணியின் ஓட்ட வேகத்தை அதிகரித்தார். பின்னர் குல்தீப் யாதவ் வீசிய அடுத்த ஓவரில் ஆரோன் பின்ச் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதிரடியாக 37 (20) ஓட்டங்களை பெற்ற கிரிஸ் லின் குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஸ்மித், வோர்னர், பேன்கிராப்ட் மீதான தடையை நீடிக்க தீர்மானம்

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய…

தொடர்ந்து ஜோடி சேர்ந்த மார்க் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளேன் மெக்ஸ்வேல் ஆகியோர் அதிரடியாக ஆடி இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினர். இருவரும் இணைந்து 78 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்களில் 153 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதன்போது மழைக் குறுக்கிட்டதன் காரணமாக அணிக்கு தலா 17 ஓவர்களாக போட்டி மட்டுப்படுத்தப்பட, அவுஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 158 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் டக்வர்த் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் கிளேன் மெக்ஸ்வேல் 24 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் அடங்கலாக 46 ஓட்டங்களை பெற்றதுடன், மார்க் ஸ்டொய்னிஸ் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை பெற்றார்.

பின்னர், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் அபாரமாக துடுப்பெடுத்தாட, ரோஹித் சர்மா (7), கே.எல்.ராஹுல் (13) மற்றும் அணித் தலைவர் விராட் கோஹ்லி (4) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தனியொருவராக இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்திய சிக்கர் தவான் அரைச்சதம் கடந்து 76 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கு 30 பந்துகளில் 65 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், துடுப்பெடுத்தாட களமிறங்கிய தினேஷ் கார்த்திக் வேகமாக ஓட்டங்களை குவிக்கத் தொடங்கினார். ரிஷாப் பாண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் குறைந்த பந்துகளுக்கு 51 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, பாண்ட் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியில் சந்திமாலின் இடத்திற்கு தனுஷ்க குணத்திலக்க

உபாதைக்குள்ளான இலங்கை அணித்தலைவர் தினேஷ் சந்திமால், இங்கிலாந்து…

போட்டியின் இறுதி ஓவரை மார்க் ஸ்டோய்னிஸ் வீச, 13 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி  விளையாடியது. எனினும் முறையே மூன்றாம், நான்காம் பந்துகளில் குர்னால் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய அணியின் வெற்றி கைநழுவியது. இறுதிப் பந்துக்கு குல்தீப் யாதவ் பௌண்டரி விளாசிய போதும், இந்திய அணி 4 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இந்திய அணி சார்பில் இறுதியில் களமிறங்கி, அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை மிரட்டிய தினேஷ் கார்த்திக் 13 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை விளாசியிருந்தார். அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் எடம் ஷம்பா மற்றும் மார்க் ஸ்டொய்னிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதேவேளை, அவுஸ்திரேலியாஇந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் 23ம் திகதி மெல்போர்னில் நடைபெறவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.

போட்டி சுருக்கம்

அவுஸ்திரேலியா – 158/4 (17) (DLS முறைப்படி – 173), கிளேன் மெக்ஸ்வேல் 46 (24), கிரிஸ் லின் 37 (20), மார்க் ஸ்டொய்னிஸ் 33* (19), குல்தீப் யாதவ் 24/2

இந்தியா – 169/6 (17), சிக்கர் தவான் 76 (42), தினேஷ் கார்த்திக் 30 (13), எடம் ஷம்பா 22/2, மார்க் ஸ்டொய்னிஸ் 27/2

முடிவுஅவுஸ்திரேலிய அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 4 ஓட்டங்களால் வெற்றி

ஆட்டநாயகன்எடம் ஷம்பா