மேற்கிந்திய தீவுகள் தலைமைப் பயிற்சியாளர் சுய தனிமைப்படுத்தளில்

80
Getty Images

இங்கிலாந்தில் மரணமடைந்த ஒருவரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொண்ட மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மோன்ஸ் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

21ஆம் நூற்றாண்டின் மதிப்புமிக்க வீரராக முரளிக்கு மகுடம்

ஜூலை மாத ஆரம்பத்தில் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மண்ணில் ஆரம்பமாகின்றது. ஆனால், கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் இருப்பதன் காரணமாக இந்த டெஸ்ட் தொடரில் விளையாட ஒரு மாதத்திற்கு முன்னரே, இங்கிலாந்துக்குச் சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களும், அதன் பயிற்சியாளர்களும், தற்போது மன்செஸ்டர் நகரில் தங்கி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

நிலைமைகள் இவ்வாறு இருக்க, இங்கிலாந்தில் தங்கியிருக்கும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான பில் சிம்மோன்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை (26) மரணமடைந்த நபர் ஒருவரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்றிருந்தார். சிம்மோன்ஸின் இந்த நடவடிக்கை அவருக்கு  கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்பு ஒன்றினை உருவாக்கியிருப்பதன் காரணமாகவே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

அதன்படி, தற்போது மன்செஸ்டர் நகரில் தான் தங்கியுள்ள ஹோட்டல் அறைக்குள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பில் சிம்மோன்ஸ், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான இரண்டு பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்த பின்னர், எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 02) மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு பயிற்சிகளை வழங்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேநேரம் பில் சிம்மோன்ஸ் இல்லாத காலப்பகுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் பெற்றுவரும் பயிற்சிகளில் எந்தவித தடங்கல்களும் ஏற்படாது என அவ்வணியின் இளம் வேகப் பந்துவீச்சாளரான அல்ஷாரி ஜோசப் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தில் என்ன செய்ய வேண்டும்?

”அது (அதாவது சிம்மோன்ஸ் இல்லாதது) எங்களது பயிற்சிகளில் குழப்பங்கள் எதனையும் ஏற்படுத்தாது.”

”எங்களுக்கு, எங்களது வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கின்றது. நாங்கள் எங்களது பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றோம். எங்களிடம் மிகப் பெரிய பயிற்றுவிப்பாளர்கள் தொகுதி ஒன்று இருக்கின்றது. அதோடு, அவர்கள் எங்கள் ஒவ்வொருவருக்கும் துணையாக இருக்கின்றனர். எனவே, யாருக்கும் இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.”  

பில் சிம்மோன்ஸ் இல்லாத நிலையில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சிகளை மேற்பார்வை செய்வதற்காக அவ்வணியின் உதவிப் பயிற்சியாளர்களான ரோடி எஸ்ட்விக், றயோன் கிரிப்பித் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<