கொவிட்-19 எதிரொலி : டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் இடம் மாற்றம்

Icc Test Championship

119
Getty Image

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெற இருந்த, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி சௌத்தம்டனுக்கு  மாற்றப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை நியூசிலாந்து அணி உறுதி செய்துவிட்ட நிலையில், அந்த அணியுடன் மோதவுள்ள 2வது அணி எது என்பதை இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முடிவு நிர்ணயித்தது.

>>பங்களாதேஷ் தொடரிலிருந்து நீக்கப்படும் கேன் வில்லியம்சன்

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் மோசமாகத் தோற்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அபாரமாக விளையாடிய இந்திய அணி 3க்கு 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியதுடன், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

இதன்படி, டெஸ்ட் போட்டிகளில் உலக சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி ஜூன் 18ம் திகதி முதல் 22ஆம் திகதி வரை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது கொவிட்-19 வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாகி வருவதால் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி சௌத்தம்டன் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

>>Video – தோல்வியிலும் சாதித்துக் காட்டிய இலங்கை வீரர்கள்..!|Sports RoundUp – Epi 152

அந்த நகரம் மிகவும் பாதுகாப்புடன், இரு அணிகளின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் இருப்பதாக ஐசிசி கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதேபோல, போட்டி நடைபெறும் நாட்களில் இங்கிலாந்து அரசின் கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கும் பட்சத்தில் இறுதிப் போட்டியைக் காண குறைந்த எண்ணிக்கையில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் ஐசிசி அதில் கூறியுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<