மாத்தறை, பெலிகன்ஸ், சென்.மேரிஸ், மொறகஸ்முல்ல அணிகளுக்கு வெற்றி

Champions League 2022

142

விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் பத்தாவது வாரத்திறக்கான போட்டிகள் அனைத்தும் கடந்த வார இறுதியிலும், இந்த வாரத்திலும் இடம்பெற்றன. அவற்றின் முடிவுகளின் சுருக்கத்தை பார்ப்போம்.

நியூ ஸ்டார் வி.க எதிர் நிகம்பூ யூத் வி.க

சுகததாச அரங்கில் சனிக்கிழமை (20) ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் பாதியில் எந்தவொரு கோலும் பெறப்படவில்லை. இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்களில் நியூ ஸ்டார் வீரர் சமீர கிறிஷான்த ஓன் கோல் முறையில் நிகம்பு யூத் அணிக்கு முதல் கோலை வழங்கினார்.

தொடர்ந்து 73ஆவது நிமிடத்தில் நிகம்பு யூத் அணியின் அந்தோனி அடுத்த கோலையும் பெற்றார். அடுத்த இரண்டு நிமிடங்களில் நியூ ஸ்டார் அணியின் நதீக புஷ்பகுமார அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனினும், அதன் பின்னர் எந்தவொரு கோலும் பெறப்படாமையினால் நிகம்பு யூத் அணி 2-1 என வெற்றி பெற்றது.

ஜாவா லேன் வி.க எதிர் SLTB வி.க

குருணாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் சனிக்கிழமை (20) இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் SLTB வீரர் யோகேஷ் முதல் கோலைப் பெற்றார்.

எனினும், 59ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் அனுபவ வீரர் ரிஸ்கான் பதில் கோலைப் பெற, போட்டி 1-1 சமநிலையடைந்தது. ஜாவா லேன் அணிக்கு வெற்றி மிக முக்கியமாக இருந்த இந்தப் போட்டி சமநிலையடைந்தமையினால் ஒரு புள்ளியைப் பெற்ற அவ்வணி, 26 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு பின்னடைந்தது. எனினும், அவ்வணி இன்னும் கிண்ணத்திற்கான போட்டியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொலிட் வி.க கிறிஸ்டல் பெலஸ் கா.க

 அநுராதபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் ஸாகிர் அஹமட் 2 கோல்களையும், பிரேம் குமார் ஒரு கோலையும் பெற, கிறிஸ்டல் பெலஸ் 3-0 என முன்னிலை பெற்றிருந்தது.

இரண்டாம் பாதி ஆரம்பமாகி 10 நிமிடங்கள் கழிந்த நிலையில் சொலிட் வீரர் மின்ரோன் அவ்வணிக்கான ஒரு கோலைப் பெற்ற போதும், ஆட்ட நிறைவில் 3-1 என்ற கோல்கள் கணக்கில் கிறிஸ்டஸ் பெலஸ் வெற்றி பெற்றது.

செரண்டிப் கா.க எதிர் மாத்தறை சிடி க

சுகததாச அரங்கில் ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் மாத்தறை சிடி அணியின் இளம் வீரர் ரெஹான் வீரப்புலி ஹெடர் முறையில் பெற்ற கோலே போட்டியின் வெற்றி கோலாக மாறியது.

எனவே, போட்டியில் 1-0 என வெற்றி பெற்ற மாத்தறை சிடி அணி சம்பியன்ஸ் லீக் புள்ளிப் பட்டியலில் ஜாவா லேன் அணியை பின்தள்ளிவிட்டு, 28 புள்ளிகளுடன் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

செரண்டிப் கால்பந்து கழகம் 22 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

பெலிகன்ஸ் வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

இறுதியாக இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பதிவு செய்து வரும் பெலிகன்ஸ் அணியினர், ஞாயிற்றுக்கிழமை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் இடம்பெற்ற போட்டியில் முன்கள வீரர் நப்ஷான் பெற்ற இரண்டு கோல்களினால் 2-0 என சோண்டர்ஸ் அணியை வெற்றி கொண்டது.

விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியின் இரண்டாம் பாதியின் இறுதி நிமிடங்களில் சோண்டர்ஸ் பின்கள வீரர் திமுது ஹெட்டியாரச்சி சிவப்பு அட்டை பெற்று மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மொறகஸ்முல்ல வி.க எதிர் சுபர் சன் வி.க

காலி மாவட்ட விளையாட்டு தொகுதி அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 25 நிமிடங்களில் டிலான் மதுசங்க, டேவிட் கருணாரத்ன மற்றும் புபுது சகுலந்த ஆகியோர் மூலம் மொறகஸ்முல்ல அணியினர் 3 கோல்களைப் பெற்றனர்.

மறுமுனையில் கசுங்க மற்றும் சஜான் ஆகியோர் சுபர் சன் அணிக்கான கோல்களைப் பெற, முதல் பாதி நிறைவில் 3-2 என மொறகஸ்முல்ல முன்னிலை பெற்றது.

எனினும், இரண்டாம் பாதியில் டேவிட் தனது இரண்டாவது கோலையும் பதிவு செய்ய, போட்டி நிறைவில் மொறகஸ்முல்ல விளையாட்டுக் கழகம் 4-2 என வெற்றி பெற்றது.

சென் மேரிஸ் வி.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

செவ்வாய்க்கிழமை (23) மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் அபினேஷ் மற்றும் தேசிய அணி வீரர் மரியதாஸ் நிதர்சன் ஆகியோர் சென் மேரிஸ் அணிக்காக கோல்களைப் போட்டு முதல் பாதியில் அவ்வணியை முன்னிலை பெறச் செய்தனர்.

இரண்டாம் பாதியில் பொலிஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த மதுக பெரேரா, மைதானத்திற்குள் நுழைந்து இரண்டு நிமிடங்களுக்குள் அவ்வணிக்கான கோலைப் பெற்றுக் கொடுத்தபோதும், போட்டி நிறைவில் 2-1 என சென் மேரிஸ் வீரர்கள் வெற்றி பெற்று தொடரில் தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தனர்.

10 வர நிறைவில் புள்ளிப் பட்டியல்

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<