19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இன்று (06) இந்தியாவினை எதிர்கொண்ட இலங்கை அணியானது 07 விக்கெட்டுக்களால் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறுகின்றது.
>>“எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்” – சந்திமால்
குழு B அணிகளில் தோல்வியுறாத அணியாக இலங்கை இந்தியாவினை எதிர்கொண்ட ஆசியக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தனர்.
அதன்படி போட்டியில் முதலில் ஆடிய இலங்கை இளம் அணி, இந்தியாவின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் தடுமாறியதோடு 46.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக லக்வின் அபேய்சிங்க 2 சிக்ஸர்கள் 3 பௌண்டரிகள் அடங்கலாக அரைச்சதம் விளாசி 69 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் சாருஜன் சண்முகநாதன் 42 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய பந்துவீச்சில் சேட்டன் ஷர்மா 3 விக்கெட்டுக்களையும், கிரண் ஷோர்மல்லே மற்றும் அயூஸ் மாட்ரே ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 179 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது ஆரம்ப வீரர்களில் ஒருவரான வைபவ் சூர்யவம்சியின் ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 21.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 67 ஓட்டங்களுடன் அடைந்தது.
இந்திய அணியின் வெற்றியினை உறுதி செய்த வைபவ் சூர்யவன்சி 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை எடுத்தார். இலங்கை அணியின் பந்துவீச்சில் விஹாஸ் தேவ்மிக்க, விரான் சாமுதித்த மற்றும் பிரவீன் மனீஷ ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக வைபவ் சூர்யவன்சி தெரிவாகினார்.
19 வயதின் ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து இலங்கை வெளியேறிய நிலையில் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியினை இந்தியா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (08) எதிர்த்தாடுகின்றது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 – 173 (46.2) லக்வின் அபேய்சிங்க 69, சேட்டன் ஷர்மா 34/3
இந்தியா U19 – 175/3 (21.4) வைபவ் சூர்யவன்சி 67, பிரவீன் மனீஷ 27/1
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<