அதிரடி வெற்றியுடன் குரோசியாவுடனான காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்

235

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடைபெற்ற நொக் அவுட் போட்டிகளில் குரோசியா மற்றும் பிரேசில் அணிகள் வெற்றியீட்டின. அந்த போட்டிகளின் விபரம் வருமாறு,

பிரேசில் அதிரடி வெற்றி

தென் கொரியாவுக்கு எதிரான நொக் அவுட் சுற்றுப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் அதிரடி வெற்றியீட்டிய பிரேசில் அணி உலகக் கிண்ண காலிறுதிக்கு இலகுவாக முன்னேறியது.

கட்டாரின் 674 அரங்கில் இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை (06) அதிகாலையில் நடைபெற்ற போட்டியில் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருந்த பிரேசில் நட்சத்திரம் மீண்டும் அணிக்குத் திரும்பி இருந்தார். இந்நிலையில் தென் கொரிய அணியால் முதல் பாதியில் பிரேசிலை நெருங்க முடியாமல் போனது.

ஏழு நிமிடங்களிலேயே வின்சியஸ் ஜூனியர் கோல் பெறுவதை ஆரம்பித்தார். தொடர்ந்து பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி நெய்மார் இரண்டாவது கோலை புகுத்தினார். இது பிரேசில் அணிக்காக நெய்மார் பெறும் 76 ஆவது கோலாக இருந்ததோடு பிரேசில் சார்பில் அதிக கோல்கள் பெற்ற பீலேவின் சாதனையை சமன் செய்ய அவருக்கு இன்னும் ஒரு கோலே எஞ்சியுள்ளது.

>> பீலேவின் உலக சாதனையை முறியடித்த கிலியன் எம்பாப்வே

29ஆவது நிமிடத்தில் வைத்து ரிச்சாலிசனின் அபார கோல் மூலம் பிரேசில் 3-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதி முடிவதற்குள் லூகாஸ் பகுடா நான்காவது கோலையும் பெற தென் கொரியா திணறியது. பைக் சியுங் ஹோ தென் கொரியாவுக்காக கோல் ஒன்றை பெற்றபோதும் அது கௌரவத்தை காக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.

ஐந்து முறை உலக சம்பியனான பிரேசில் 1998 தொடக்கம் உலகக் கிண்ணத் தொடரின் நொக் அவுட் சுற்றில் நான்கு கோல்களை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு அந்த அணி அர்ப்பணித்தது. 82 வயதான பீலே மருத்துவமனையில் இருந்து போட்டியை பார்வையிட்டு பிரேசிலின் வெற்றிக்காக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

பிரேசிலின் இந்த வெற்றியுடன் அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை (09) நடைபெறும் காலிறுதிப் போட்டியில் குரோசியாவை எதிர்கொள்ளவுள்ளது.

பெனால்டியில் ஜப்பானை வீழ்த்தியது குரோசியா

குரோசிய கோல் காப்பாளர் டொமினிக் லிவகோவிச் ஜப்பானின் மூன்று பெனால்டி சூட் அவுட்களை அபாரமாக தடுத்து குரேசிய அணி உலகக் கிண்ண காலிறுத்திக்கு முன்னெறுவதை உறுதி செய்தார்.

அல் ஜனூப் அரங்கில் திங்கட்கிழமை (06) நடைபெற்ற நொக் அவுட் போட்டியின் முழு நேர முடிவில் ஜப்பான் மற்றும் குரோசிய அணிகள் தலா ஒரு கோலை பெற்ற நிலையில் வழங்கப்பட்ட அரை மணி கொண்ட மேலதிக நேரத்திலும் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவர முடியவில்லை.

>> பிரான்ஸுடனான காலிறுதிக்கு இங்கிலாந்து தகுதி

இந்நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் முடிவை தீர்மானிப்பதற்கு முதல் முறை பெனால்டி சூட் அவுட் பயன்படுத்தப்பட்டது. இதன்போது ஜப்பானின் முதல் இரு உதைகளையும் தடுத்த லிவகோவிச், தொடர்ந்து மற்றொரு பெனால்டி முயற்சியையும் முறியடித்தார்.

இதன்மூலம் குரோசிய அணி 3-1 என பெனால்டி சூட் அவுட் முறையில் வெற்றியீட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்  கண்டது. குரோசியா நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ணத்தில் இறுதிப் போட்டிவரை முன்னேற்றம் கண்ட நிலையில் இம்முறையும் இறுதிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.

 போட்டியின் முதல் பாதியில் குரோசியா ஆதிக்கம் செலுத்தியபோதும் ஜப்பான் வீரர்கள் மின்னல் வேகத்தில் பதில் தாக்குதல் தொடுக்கும் முயற்சியிலேயே அதிகம் ஈடுபட்டனர்.

எனினும் 43ஆவது நிமிடத்தில் டைசன் மேடா ஜப்பானுக்காக கோல் பெற்ற நிலையில், குரோசியா 55ஆவது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அது தொடக்கம் போட்டி முழுவதும் பரபரப்பு நீடித்தது.

>>  மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<