கண்டி அணிக்காக சதமடித்து அசத்திய கமிந்து மெண்டிஸ்

National Super League Four Day Tournament 2022

126

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் அணிகள் மோதிய நான்காவது போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று (04) நிறைவுக்கு வந்தது.

சஹன் ஆராச்சிகே, கமிந்து மெண்டிஸின் அபார சதங்கள், கசுன் விதுர, ஓஷத பெர்னாண்டோ, லஹிரு உதார ஆகியோரது அரைச்சதங்கள் மற்றும் அவிந்து தீக்ஷன 5 விக்கெட் பிரதிகள் மூலம் சகலதுறையிலும் பிரகாசித்த கண்டி அணி, யாழ்ப்பாண அணிக்கு எதிரான போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.

கண்டி அணி போட்டி முழுவதும் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவ்வணிக்கு வெற்றி பெற முடியவில்லை.

இந்த நிலையில், போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம், கண்டி அணிக்காக துடுப்பாட்டத்தில் ஜொலித்த அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் சதமடித்து அசத்த, லஹிரு உதார மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகிய இருவரும் அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்தனர்.

இதில் சஹன் ஆராச்சிகே முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்த, லஹிரு உதார அரைச்சதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டார்.

கண்டி – பல்லேகல மைதானத்தில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமாகிய இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் சகலதுறை வீரர் சஹன் ஆராச்சிகே சதம் கடந்து 162 ஓட்டங்களையும், கசுன் விதுர (67), ஓஷத பெர்னாண்டோ (50) மற்றும் லஹிரு உதார (50) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி, 92.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

யாழ்ப்பாண அணிக்காக ஜனித் லியனகே, சமிந்த பெர்னாண்டோ, கீத் குமார மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரும் அரைச்சதங்களை எடுத்து பிரகாசித்திருந்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் அவிந்து தீக்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காண்பிக்க, அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளைக் வீழ்த்தினார்.

இதன்படி 185 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய கண்டி அணி, வெற்றி பெற முயற்சிக்காமல் கடைசி நாளான இன்று (06) முழு நேரமும் துடுப்பெடுத்தாடி 88.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தினாலும், போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் கமிந்து மெண்டிஸ் சதம் கடந்து 234 பந்துகளில் 137 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, லஹிரு உதார (65) மற்றும் சஹன் ஆராச்சிகே (65) ஆகிய இருவரும் அரைச்சதங்களைப் பெற்றுக்கொண்டனர்

இதில் முதலாவது வாரத்துக்காக நடைபெற்ற ஆட்டங்களில் காலி அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த கமிந்து மெண்டிஸ், முதல் இன்னிங்ஸில் சதம் கடந்து 111 ஓட்டங்களையும், 2 ஆவது இன்னிங்ஸில் 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார்.

அதேபோன்று, இம்முறை தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இதுவரை 2 சதங்கள் மற்றும் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 327 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட கமிந்து மெண்டிஸ், அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண அணியின் பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளை அதிபட்சமாக வீழ்த்தினார்.

இதன்படி, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கண்டி அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டது.

முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற காலி அணிக்கு எதிரான போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற கண்டி அணி, அதற்கான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேனை, தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளதுடன், இதில் நிகரப் புள்ளிகள் அடிப்படையில் காலி அணி முதலிடத்தையும், கொழும்பு அணி 2 ஆவது இடத்தையும், யாழ்ப்பாண அணி 3 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இதனிடையே, தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மூன்றாவது வாரத்துக்கான போட்டிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 503/9d (103.2) – சஹன் ஆராச்சிகே 162, கசுன் விதுர 67, ஓஷத பெர்னாண்டோ 50, லஹிரு உதார 50, அஷேன் டேனியல் 38, கமில் மிஷார 35, நிபுன் மாலிங்க 3/68, சந்தூஷ் குணதிலக்க 2/55, கசுன் மதுஷங்க 2/78

யாழ்ப்பாணம் அணி – 318/10 (92.4) – ஜனித் லியனகே 85, சமிந்த பெர்னாண்டோ 73, கீத் குமார 58*, நிஷான் மதுஷ்க 56, அவிந்து தீக்ஷன 5/135, அசித்த பெர்னாண்டோ 2/43

கண்டி அணி – 322/5d (88.4) – கமிந்து மெண்டிஸ் 137, லஹிரு உதார 65, சஹன் ஆராச்சிகே 65, லசித் குரூஸ்புள்ளே 31, துனித் வெல்லாலகே 3/66

போட்டி முடிவு – போட்டி சமநிலையில் முடிவுற்றது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<