NSL தொடரின் 2ஆவது நாளில் சஹன், நிபுன் சதமடித்து அபாரம்

National Super League Four Day Tournament 2022

131

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் இரண்டாவது நாள் ஆட்டங்கள் வெள்ளிக்கிழமை (04) நிறைவுக்கு வந்தன.

இதில் கண்டி அணியின் சஹன் ஆராச்சிகே, கொழும்பு அணியின் நிபுன் தனன்ஞய ஆகிய இருவரும் தேசிய சுபர் லீக் தொடரில் தத்தமது முதலாவது சதங்களைப் பெற்று அசத்த, கண்டி அணியின் கசுன் விதுர, கொழும்பு அணியின் ரொஷேன் சில்வா மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் அரைச்சதங்களைக் குவித்து பிரகாசித்திருந்தனர்.

கொழும்பு எதிர் தம்புள்ளை

நிபுன் தனன்ஞயவின் கன்னி சதம் மற்றும் அஷேன் பண்டார, ரொஷேன் சில்வா ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் தம்புள்ள அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 104 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்டது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் இரண்டாவது நாளில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு அணி, ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 381 ஓட்டங்களைக் குவித்தது.

கொழும்பு அணி சார்பில் இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிபுன் தனன்ஞய 114 ஓட்டங்கள் விளாச, அஷேன் பண்டார ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 57 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் 21 வயதான நிபுன் தனன்ஞய முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் மாலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 277/10 (76.3) – அஷான் பிரியன்ஞன் 61, சமிந்து விஜேசிங்க 54*, லியோ ப்ரான்சிஸ்கோ 36, லஹிரு சமரகோன் 35, லக்ஷித மானசிங்க 3/78, கசுன் ராஜித 2ஃ32, நிசர தாரக 2/57, பிரபாத் ஜயசூரிய 2/57

கொழும்பு அணி – 381/5 (10) – நிபுன் தனன்ஞய 114, அஷேன் பண்டார 85*, ரொஷேன் சில்வா 57, சம்மு அஷான் 41, லஹிரு மதுஷங்க 34*, மாலிந்த புஷ்பகுமார 2/89

யாழ்ப்பாணம் எதிர் கண்டி

கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இன்று தமது முதல் இன்னிங்ஸினைத் தொடர்ந்த கண்டி அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்களை எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

கண்டி அணியின் துடுப்பாட்டத்தில் சகலதுறை வீரர் சஹன் ஆராச்சிகே சதம் கடந்து 162 ஓட்டங்களையும், கசுன் விதுர (67), ஓஷத பெர்னாண்டோ (50) மற்றும் லஹிரு உதார (50) ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர்.

இதில் தனது 3ஆவது முதல்தர சதத்தைப் பூர்த்தி செய்த 25 வயதான சஹன் ஆராச்சிகே, கடந்த வாரம் நடைபெற்ற காலி அணிக்கெதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் 52 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

அதேபோல, கசுன் விதுர இம்முறை போட்டித்தொடரில் தனது இரண்டாவது அரைச்சதத்தைப் பூர்த்தி செய்தார்.

முன்னதாக நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் ஓஷத பெர்னாண்டோ மற்றும் லஹிரு உதார ஆகிய இருவரும் கண்டி அணிக்காக அரைச்சதங்களைக் குவித்து வலுச்சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் அணியின் பந்துவீச்சில் நிபுன் மாலிங்க 3 விக்கெட்டுகளையும், சந்தூஷ் குணதிலக்க மற்றும் கசுன் மதுஷங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய யாழ்ப்பாணம் அணி, போதியளவு வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவடையும் போது விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை எடுத்து காணப்படுகின்றது.

துடுப்பாட்டத்தில் நிஷான் மதுஷ்க 11 ஓட்டங்களையும், நவோத் பரணவிதான 2 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 503/9d (103.2) – சஹன் ஆராச்சிகே 162, கசுன் விதுர 67, ஓசத பெர்னாண்டோ 50, லஹிரு உதார 50, அஷைன் டேனியல் 38, கமில் மிஷார நிபுன் மாலிங்க 3/68, சந்தூஷ் குணதிலக்க 2/55, கசுன் மதுஷங்க 2/78

யாழ்ப்பாணம் அணி – 13/0 (7) – நிஷான் மதுஷ்க 11, நவோத் பரணவிதான 2

இந்த இரண்டு போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் சனிக்கிழமை தொடரும்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<