இளம் வீரர்களின் பிரகாசிப்பால் கொழும்பு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

National Super League Four Day Tournament 2022

102

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகளின் மூன்றாவது நாள் ஆட்டங்கள் இன்று (04) நிறைவுக்கு வந்தன.

இதில் தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் கொழும்பு அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் இம்முறை தேசிய சுபர் லீக் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த அணியென்ற பெருமையை கொழும்பு அணி பெற்றது.

அதேபோல, யாழ்ப்பாண அணிக்கெதிரான போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற கண்டி அணி, 210 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

இதில் கண்டி அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய 23 வயதான அவிந்து தீக்ஷன, 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, முதல்தரப் போட்டிகளில் தன்னுடைய முதலாவது 5 விக்கெட் குவியைப் பதிவுசெய்தார்.

இதனிடையே, இன்று நிறைவுக்கு வந்த மூன்றாவது நாள் ஆட்டங்களில் கொழும்பு அணிக்காக லஹிரு மதுஷங்கவும், யாழ்ப்பாண அணிக்காக ஜனித் லியனகே, சமிந்த பெர்னாண்டோ, கீத் குமார மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரும் அரைச்சதங்களை எடுத்து பிரகாசித்திருந்தனர்.

கொழும்பு எதிர் தம்புள்ளை

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில்  துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி, தமது முதல் இன்னிங்சுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி, நிபுன் தனஞ்சயவின் அபார சதம் மற்றும் அஷேன் பண்டார (91), லஹிரு மதுஷங்க (68), ரொஷேன் சில்வா (57) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 516 ஓட்டங்களைக் குவித்தது.

தம்புள்ளை அணியின் பந்துவீச்சில் மாலிந்த புஷ்பகுமார 141 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 239 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இன்று தொடங்கிய தம்புள்ளை அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 107 ஓட்டங்களுக்கு சுருண்டது.

எனவே, போட்டியின் கடைசி நாள் எஞ்சியிருக்க, சம்மு அஷான் தலைமையிலான கொழும்பு அணி, 132 ஓட்டங்களுடன் இன்னிங்ஸ் வெற்றியை ஈட்டியது.

தம்புள்ளை அணிக்காக அஷான் பிரியன்ஞன் 23 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, கொழும்பு அணி சார்பில் பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷித மானசிங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், சம்மு அஷான் மற்றும் கசுன் ராஜித ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 277 (76.3) – அஷான் பிரியன்ஞன் 61, சமிந்து விஜேசிங்க 54*, லியோ ப்ரான்சிஸ்கோ 36, லஹிரு சமரகோன் 35, லக்ஷித மானசிங்க 3/78, கசுன் ராஜித 2/32, நிசல தாரக 2/57, பிரபாத் ஜயசூரிய 2/57

கொழும்பு அணி – 516 (155.2) – நிபுன் தனஞ்சய 114, அஷேன் பண்டார 91, லஹிரு மதுஷங்க 68, ரொஷேன் சில்வா 57, நிசல தாரக 47, சம்மு அஷான் 41, மாலிந்த புஷ்பகுமார 5/141

தம்புள்ளை அணி – 107 (31.1) – அஷான் பிரியன்ஞன் 23, துவிந்து திலகரட்ன 20, பிரபாத் ஜயசூரிய 3/29, லக்ஷித மானசிங்க 3/38, சம்மு அஷான் 2/9, கசுன் ராஜித 2/22

முடிவு – கொழும்பு அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் வெற்றி

யாழ்ப்பாணம் எதிர் கண்டி

யாழ்ப்பாண அணிக்கெதிராக தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி, இன்றைய மூன்றாம் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்களை குவித்து 210 ஓட்டங்களால் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

கண்டி – பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தமது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 318 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

யாழ்ப்பாண அணிக்காக ஜனித் லியனகே, சமிந்த பெர்னாண்டோ, கீத் குமார மற்றும் நிஷான் மதுஷ்க ஆகியோரும் அரைச்சதங்களை எடுத்து பிரகாசித்திருந்தனர்.

கண்டி அணியின் பந்துவீச்சில் அவிந்து தீக்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிரடி காண்பிக்க, அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில், தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் கண்டி  அணி, இன்றைய மூன்றாம் நாள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி  25 ஓட்டங்களைக் குவித்து 210 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்தப் போட்டியின் நான்காவதும், கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 503/9d (103.2) – சஹன் ஆராச்சிகே 162, கசுன் விதுர 67, ஓஷத பெர்னாண்டோ 50, லஹிரு உதார 50, அஷேன் டேனியல் 38, கமில் மிஷார 35, நிபுன் மாலிங்க 3/68, சந்தூஷ் குணதிலக்க 2/55, கசுன் மதுஷங்க 2/78

யாழ்ப்பாண அணி – 318 (92.4) – ஜனித் லியனகே 85, சமிந்த பெர்னாண்டோ 73, கீத் குமார 58*, நிஷான் மதுஷ்க 56, அவிந்து தீக்ஷன 5/135, அசித்த பெர்னாண்டோ 2/43

கண்டி அணி – 25/0 (7) – லசித் குரூஸ்புள்ளே 15, கமில் மிஷார 9

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<