கண்டி அணிக்காக அரைச்சதமடித்து அசத்திய ஓஷத பெர்னாண்டோ

National Super League Four Day Tournament 2022

102
Dialog-SLC National Super League 2022

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான இரண்டு போட்டிகள் இன்று (03) ஆரம்பமாகின.

இதில் தம்புள்ளை அணி சார்பாக அஷான் பிரியஞ்சன் மற்றும் சமிந்து விஜேசிங்க ஆகியோரும், கண்டி அணி சார்பாக ஓஷத பெர்னாண்டோ மற்றும் லஹிரு உதார ஆகியோர் அரைச்சதங்களைப் பெற்று பிரகாசித்திருந்தனர்.

கொழும்பு எதிர் தம்புள்ளை

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி முதல் இன்னிங்சுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் அனுபவமிக்க வீரரான அஷான் பிரியஞ்சன் 61 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொள்ள, சமிந்து விஜேசிங்க ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைக் குவித்தார்.

கொழும்பு அணியின் பந்துவீச்சில் லக்ஷித மானசிங்க 78 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், கசுன் ராஜித, நிசல தாரக மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. துடுப்பாட்டத்தில் நிபுன் தனஞ்சய 24 ஓட்டங்களையும், க்ரிஷான் சன்ஜுல 18 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டனர்.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை அணி – 277 (76.3) – அஷான் பிரியஞ்சன் 61, சமிந்து விஜேசிங்க 54*, லியோ ப்ரான்சிஸ்கோ 36, லஹிரு சமரகோன் 35, லசித் அபேரத்ன 16, லக்ஷித மானசிங்க 3/78, கசுன் ராஜித 2/32, நிசல தாரக 2/57, பிரபாத் ஜயசூரிய 2/57

கொழும்பு அணி – 46/0 (10) – நிபுன் தனஞ்சய 24*, க்ரிஷான் சன்ஜுல 18*

யாழ்ப்பாணம் எதிர் கண்டி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஓஷத பெர்னாண்டோ (50) மற்றும் லஹிரு உதார (50) ஆகியோரது அரைச்சதங்களின் உதவியுடன் ஜப்னா அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் கண்டி அணி வலுவான நிலையில் உள்ளது.

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் ஜப்னா அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி அணி, இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 243 ஓட்டங்களைக் பெற்றுக்கொண்டது.

இந்தப் போட்டியில் கண்டி அணிக்காக துடுப்பாடிய கமில் மிஷார 35 ஓட்டங்களையும், ஜப்னா அணிக்காக ஆடிய ஜனித் லியனகே ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியிருந்தனர். இந்த இரண்டு வீரர்களும் அண்மையில் நிறைவுக்கு வந்த அவுஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான T20 தொடர்களில் அறிமுகமாகி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்னா அணியின் பந்துவீச்சில் சந்தூஷ் குணதிலக்க 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டியின் சுருக்கம்

கண்டி அணி – 243/5 (68) – ஓஷத பெர்னாண்டோ 50, லஹிரு உதார 50, சஹன் ஆராச்சிகே 41*, கமில் மிஷார 35, கமிந்து மெண்டிஸ் 24, சந்தூஷ் குணதிலக்க 2/30, நிபுன் மாலிங்க 1/15, ஜனித் லியனகே 1/49

இந்த இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<