பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்றவர்கள் கௌரவிப்பு

Commonwealth Games 2022

718

இங்கிலாந்தில் அண்மையில் நடந்து முடிந்த பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில், இலங்கைக்காக பதக்கங்களை வென்ற வீரர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (25) தேசிய ஒலிம்பிக் குழு இல்லத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்படி, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாரா ஈட்டி எறிதல் வீரர் பாலித பெர்னாண்டோ, வெண்கலப் பதக்கம் வென்ற பளுதூக்கல் வீரர் இசுரு குமார, வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை நெத்மி அஹிம்சா ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். எனினும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற யுபுன் அபேகோன் இத்தாலியில் வசிப்பதால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம், அதன் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா, இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷா டி சில்வா, கிறிஸ்ப்ரோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அமோரிஸ் சீலர் மற்றும் இலங்கை பொதுநலவாய விளையாட்டுக் குழுவின் செயற்பாட்டு பிரதானி தம்பத் பெர்னாண்டோ ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா,

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு வீரர்களை அனுப்புவதற்கு தேசிய ஒலிம்பிக் குழு பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும், இந்த நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு தேசிய ஒலிம்பிக் குழு எப்போதும் உதவத் தயார் என்று தெரிவித்தார்.

இதனிடையே, கிறிஸ்ப்ரோ நெக்ஸ்ட் சேம்ப் நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அமோரிஸ் சீலர்,

கிறிஸ்ப்ரோ நெக்ஸ்ட் சம்பியன் திட்டத்தில் இருந்து நெத்மி அஹிம்சா சர்வதேச ரீதியில் முதல் தடவையாக பதக்கமொன்று வென்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று கூறினார்.

குறித்த நிகழ்வினைத் தொடர்ந்து தேசிய ஒலிம்பிக் குழுவினால் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற நான்கு வீரர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <