மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் பங்களாதேஷில்

115

மகளிர் அணிகளுக்கான ஆசியக் கிண்ணத் தொடர் இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆசியக்கிண்ணத்துக்கான பங்களாதேஷ் குழாத்தில் மொஹமட் நயீம்

T20 போட்டிகளாக நடைபெறவுள்ள இந்த ஆசியக் கிண்ணத் தொடர், 2018ஆம் ஆண்டின் பின்னர் மகளிர் அணிகளுக்காக இடம்பெறும் முதல் ஆசியக் கிண்ணத் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் ஆசிய கிரிக்கெட் சபை (ACC) மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெறும் திகதிகள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடாத போதும், மகளிர் ஆசியக் கிண்ணத் தொடருக்கான திகதிகள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) பிரதான நிர்வாகியான சபியுல் அலாம் செளத்ரி மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக ESPNcricinfo நிறுவனம் செய்தி  வெளியிட்டிருக்கின்றது.

அதேவேளை மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியாக இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தொடரை நடாத்தும் பங்களாதேஷ், தாய்லாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள் இம்முறை பங்கெடுக்கவிருக்கின்றன.

அதேநேரம் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இடம்பெறும் மைதானமாக சில்லேட் மைதானம் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபார சதத்துடன் இலங்கை இளம் கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்த்த அசித

இதேவேளை 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் – பங்களாதேஷ் மகளிர் அணிகள் இடையிலான இருதரப்பு தொடரினை அடுத்து, பங்களாதேஷில் நடைபெறவுள்ள முதல் மகளிர் கிரிக்கெட் தொடராகவும் மகளிர் ஆசியக் கிண்ணத் தொடர் அமையவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக 2012ஆம் ஆண்டிலிருந்து T20 போட்டிகளாக ஒழுங்கு செய்யப்பட்டு ஆசியக் கிண்ணத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கடைசியாக பங்களாதேஷ் அணி இந்தியாவை வீழ்த்தி ஆசியக் கிண்ண சம்பியன் பட்டம் வென்றதோடு, தொடரின் நடப்புச் சம்பியனாக இன்று வரை காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<