நான்கு பதக்கங்களுடன் பொதுநலவாய விளையாட்டு விழாவை நிறைவுசெய்த இலங்கை!

Commonwealth Games 2022

578

இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் கடந்த 11 நாட்களாக நடைபெற்றுவந்த 2022 பொதுநலவாய விளையாட்டு  விழா பல பொழுதுபோக்கு நிகழ்வுகளுடன் வெகுவிமர்சையாக நிறைவுக்குவந்தது.

பொதுநலவாய விளையாட்டு  விழாவின் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த 5000 இற்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றதுடன், 877 பதக்கங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

>> பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற ஸ்டார்க்கின் மனைவி, சகோதரர்!

பேர்மிங்ஹம் அலெக்ஸாண்டர் மைதானத்தில் நடைபெற்ற நிறைவு விழா, நடனம் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல பிரமுகர்கள் கலந்துகொண்டதுடன், இங்கிலாந்து அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக இளவரசர் எட்வர்ட் கலந்துக்கொண்டார்.

இதில் முக்கிய விருதான இந்த ஆண்டு போட்டித்தொடரின் சிறந்த விளையாட்டு வீரருக்கான டேவிட் டிக்சன் விருதை  சிங்கப்பூர் டேபிள் டென்னிஸ் வீரரான பெங் தியான்வீ வென்றார். இந்த ஆண்டு இவர், 3 தங்கப் பதக்கங்களை வென்றதுடன், பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 9 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இதேவேளை அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழா 2026ம் ஆண்டு மார்ச் மாதம் அஸ்திரேலியாவின் விக்டோரியாவில் நடைபெறவுள்ள நிலையில், அதனை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் முகமாக பொதுநலவாய கொடி அவுஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> Photos – Commonwealth Games 2022 – Day 04

இலங்கைக்கு நான்கு பதக்கங்கள்

நடைபெற்று முடிந்திருக்கும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைச் சேர்ந்த 110 வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்ததுடன், இவர்களுடன் 51 அதிகாரிகளும் இங்கிலாந்தின் பேர்மிங்ஹத்திற்கு புறப்பட்டிருந்தனர்.

இலங்கையிலிருந்து புறப்பட்ட 110 வீர, வீராங்கனைகளில் ஒரு வெள்ளி மற்றும் 3 வெண்கலப்பதக்கங்களுடன் இலங்கையானது 4 பதக்கங்களை வென்று, 31வது இடத்துடன் தொடரை நிறைவுசெய்துக்கொண்டது.

இலங்கைக்கான முதல் பதக்கத்தை பளுதூக்கல் வீரர் டிலங்க குமார பெற்றுக்கொடுத்தார். ஆண்களுக்கான 55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இவர், ஸ்னெட்ச் முறையில் 105 கிலோகிராம் எடையையும், கிளீன் எண்ட் ஜெக் முறையில் 210 கிலோகிராம் எடையையும் தூக்கி வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

இதனைத்தொடர்ந்து ஒரே நாளில் இலங்கை ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான பரா பரிதி வட்டம் எறிதல் F42 பிரிவு போட்டியில் பங்கேற்ற பாலித்த பண்டார, இலங்கைக்கு முதலும் கடைசியுமான வெள்ளிப்பதக்கத்தை வென்றுக்கொடுத்தார். இவர் தன்னுடைய அதிசிறந்த திறமையை வெளிப்படுத்தி, 44.20 மீற்றர் தூரம் வீசி பதக்கத்தை வென்றுக்கொடுத்தார்.

பாலித பண்டார ஒரு பக்கம் வெள்ளப்பதக்கத்தை தன்வசப்படுத்தியிருந்த நிலையில், இலங்கை விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 100 மீற்றர் (10.14 செக்கன்கள்) ஓட்டத்தில் வெண்கலப்பதக்கத்தை வென்றுக்கொடுத்திருந்தார்.

>> Photos – Commonwealth Games 2022 – Day 07 

பொதுநலவாய விளையாட்டு விழாவில் 100 மீற்றர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், 1998ம் ஆண்டுக்கு பின்னர் இலங்கைக்காக சுவட்டு நிகழ்வொன்றில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

ஒரே நாளில் பெற்ற இந்த இரண்டு பதக்கங்களை தொடர்ந்து இலங்கை இறுதியாக மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றிருந்தது. 18வது வயதான நெத்மி அஹின்ஷா 57 கிலோகிராம் எடைப்பிரிவில் அவுஸ்திரேலியாவின் இரீனி சைமெண்டிஸை 10-0 என வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை வென்றிருந்தார். அதேநேரம், பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்காக குறைந்த வயதில் பதக்கம் வென்ற வீராங்கனை என்ற பெருமையையும் இவர் பெற்றுக்கொண்டார்.

மேற்குறித்த வீரர்கள் பதக்கங்களை வென்றிருந்ததுடன் குத்துச்சண்டை, பெட்மிண்டன், ஸ்குவாஷ், கடற்கரை கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளில் இலங்கை குறிப்பிடத்தக்க அளவு பிரகாசிப்பை வெளிப்படுத்தியிருந்தது.

அதுமாத்திரமின்றி பெண்களுக்கான நீளம் பாய்தலில் சாரங்கி சில்வா (13வது இடம்), 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டத்தில் நிலானி ரத்நாயக்க (7வது இடம்), ஈட்டி எறிதலில் சுமேத ரணசிங்க (10வது இடம்) ஆகியோர் இறுதிப்போட்டிகளுக்கு தகுதிபெற்றிருந்ததுடன், காலிங்க குமாரகே 400 மீற்றர் ஓட்டப்பந்தயத்தின் அரையிறுதிக்கும் முன்னேறியிருந்தார்.

>> Photos – Commonwealth Games 2022 – Day 06 

சாதனைகள்

இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் இரண்டு உலக சாதனைகள் தகர்க்கப்பட்டிருந்தன. பெண்களுக்கான பரா F42-44/61-64 பரிதி வட்டம் எறிதல் போட்டியில், நைஜீரிய வீராங்கனை குட்னஸ் சிமேரி நவாச்சுக்வு உலக சாதனையை பதிவுசெய்திருந்தார்.

பெண்களுக்கான பரா F42-44/61-64 பரிதி வட்டம் எறிதல் இறுதிப்போட்டியில், 36.56 மீற்றர் தூரத்துக்கு பரிதி வீசி F42 பிரிவுக்கான உலக சாதனையை இவர் நிகழ்த்தியதுடன், தங்கப்பதக்கத்தையும் வென்றிருந்தார்.

இதேவேளை பெண்களுக்கான 4X200 பிரீஸ்டைல் (Freestyle) நீச்சல் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி புதிய உலக சாதனையை பதிவுசெய்திருந்தது. போட்டித்தூரத்தை 07.39.29 நிமிடங்களில் நிறைவுசெய்து தங்களுடைய புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றிருந்தது. இதற்கு முதல் சீனா 07.40.33 நிமிடங்களில் போட்டித்தூரத்தை கடந்து உலக சாதனையை தக்கவைத்திருந்ததமை குறிப்பிடத்தக்கது.

>> Photos – Commonwealth Games 2022 – Day 02 

இம்முறை இரண்டு உலக சாதனைகள் முறியடிக்கப்பட்டிருந்த அதேசமயம், பல்வேறு போட்டிகளில் பல பொதுநலவாய போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டிருந்திருந்தன. இதில், குறிப்பாக தெற்காசியாவை பொருத்தவரை அதிக கவனத்தை ஈர்த்திருந்தது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியாகும்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அர்ஷாட் நதீம் 90.18 மீற்றர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, பொதுநலவாய போட்டி சாதனையை பதிவுசெய்தார். அதேநேரம், தெற்காசியவை பொருத்தவரை ஈட்டி எறிதல் போட்டிகளில் 90 மீற்றரை கடந்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார்.

அதுமாத்திரமின்றி 1966ம் ஆண்டுக்கு பின்னர் பாகிஸ்தானுக்காக முதன்முறையாக பொதுநலவாய தடகள போட்டியொன்றில் பதக்கம் வென்றவர் என்ற சாதனையையும் இவர் பதிவுசெய்திருந்தார். இதற்கு முதல் 1966ம் ஆண்டு ஈட்டி எறிதல் போட்டியில் முஹமது நவாஸ் வெள்ளிப்பதக்கத்தை வென்றுக்கொடுத்திருந்தார். எனவே, பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஈட்டி எறிதல் போட்டியில் பாகிஸ்தான் பெறும் முதல் தங்கப்பதக்கமாகவும் இது பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதக்கப் பட்டியல்

பொதுநலவாய விளையாட்டு விழாவின் இறுதி தங்கப்பதக்கத்தை மலேசியாவின் மகளிர் இரட்டையர் பிரிவு பெட்மிண்டன் அணி 2-0 என இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிக்கொண்டிருந்தது.

>> Photos – Commonwealth Games 2022 – Day 09

ஒட்டுமொத்த போட்டிகளின் முடிவை பொருத்தவரை 67 தங்கம், 57 வெள்ளி மற்றும் 54 வெண்கலப்பதக்கத்தை வென்ற அவுஸ்திரேலியா  ஒட்டுமொத்தமாக 178 பதக்கங்களை வென்று இம்முறை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.

அதுமாத்திரமின்றி 23 தடவைகள் நடைபெற்றுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் 14வது தடவையாகவும் முதலிடத்தை அவுஸ்திரேலியா தக்கவைத்துள்ளதுடன், இறுதியாக 2018ம் ஆண்டும் அவுஸ்திரேலியா முதலிடத்தை பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவுஸ்திரேலியாவுக்கு அடுத்தப்படியாக 57 தங்கம், 66 வெள்ளி மற்றும் 53 வெண்கலம் உள்ளடங்களாக 176 பதக்கங்களை வென்ற இங்கிலாந்து இரண்டாவது இடத்தை பிடித்துக்கொண்டதுடன், 26 தங்கம், 32 வெள்ளி மற்றும் 34 வெண்கலம் உள்ளடங்களாக 92 பதக்கங்களை வென்ற கனடா மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.

நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
அவுஸ்திரேலியா 67 57 54 178
இங்கிலாந்து 57 66 53 176
கனடா 26 32 34 92

 

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <