பொலிஸை வீழ்த்திய நிகம்பு யூத்; சோண்டர்ஸ் – ஜாவா லேன் மோதல் சமநிலை

Champions League 2022

238

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இரண்டாம் வாரத்திற்காக ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஒரு பொட்டியில் நிகம்பு யூத் அணி வெற்றி பெற, மேலும் இரண்டு போட்டிகள் சமநிலையில் நிறைவுற்றன.

ஜாவா லேன் வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

இலங்கையில் உள்ள முன்னணி இரண்டு கழகங்களான இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மோதல் கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றது. ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமான இந்த போட்டியின் முதல் பாதி எந்தவொரு கோலும் இன்றி நிறைவுற்றது.

இந்நிலையில் ஆரம்பமான இரண்டாம் பாதியின் 63ஆவது நிமிடத்தில் சப்ரான் கொடுத்த பந்துப் பரிமாற்றத்தினால் மாலக பெரேரா பெற்ற கோலினால் ஜாவா லேன் அணி முன்னிலை பெற்றது. எனினும், 83ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து சோண்டர்ஸ் அணியின் டிலான் கௌஷல்ய உயர்த்தி வழங்கிய பந்துப் பரிமாற்றத்தின் மூலம் இளம் வீரர் பெதும் கிம்ஹான பெற்ற கோலினால் போட்டி தலா ஒரு கோலுடன் சமநிலை பெற்றது.

முழு நேரம்: ஜாவா லேன் வி.க 1 – 1 சோண்டர்ஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

ஜாவா லேன் வி.க – மாலக பெரேரா 63’

சோண்டர்ஸ் வி.க – பெதும் கிம்ஹான 83’

நிகம்பு யூத் கா.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

காலி மாவட்ட விளையாட்டுத் தொகுதி அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 22ஆம் நிமிடத்திலும் 27ஆவது நிமிடத்திலும் முறையே நிகம்பு யூத் அணியின் கிறிஸ்டீன் மற்றும் அணித் தலைவர் நிலுக ஆகியோர் இரண்டு கோல்களைப் பெற்றனர். அதன் பின்னர் 90ஆவது நிமிடம் வரை எந்தவொரு மேலதிக கோலும் பெறப்படாத நிலையில் 90ஆவது நிமிடத்தில் பொலிஸ் அணியின் இளம் வீரர் சிஷான் அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனினும், போட்டி நிறைவில் முதல் பாதியில் பெறப்பட்ட இரண்டு கோல்களினால் நிகம்பு யூத் வீரர்கள் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று, தொடரில் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தனர். பொலிஸ் விளையாட்டுக் கழகம் தாம் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: நிகம்பு யூத் கா.க 2 – 1 இலங்கை பொலிஸ் வி.க

கோல் பெற்றவர்கள்

  • நிகம்பு யூத் கா.க – கிறிஸ்டீன் பெர்னாண்டோ 22, நிலுக ஜனித் 27
  • இலங்கை பொலிஸ் வி.க – சிஷான் பிரபுத்த 90

சொலிட் வி.க எதிர் நியூ ஸ்டார் வி.க

குருனாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முழு நேர நிறைவு வரையில் எந்தவொரு அணி வீரரும் கோல் எதனையும் பெறாமையினால் ஆட்டம் சமநிலையானது.

எனவே, நியூ ஸ்டார் ஒரு வெற்றியுடனும், சொலிட் அணி எந்தவொரு வெற்றியையும் பதிவு செய்யாத நிலையிலும் இந்த தொடரில் நீடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: சொலிட் வி.க 0 – 0 நியூ ஸ்டார் வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<