மாத்தறை சிடி, செரண்டிப், சுபர் சன் அணிகளுக்கு இரண்டாவது வெற்றி

Champions League 2022

223

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இரண்டாவது வாரத்திற்கான போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் மாத்தறை சிடி, செரண்டிப், சுபர் சன் அணிகள் தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளன.  

மாத்தறை சிட்டி கா.க எதிர் இலங்கை பொலிஸ் வி.க

தொடரின் இரண்டாம் வாரத்திற்கான முதல் போட்டியாக இந்த மோதல் மாத்தறை கொடவில அரங்கில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது. முதல் பாதியில் பிரின்ஸ் மாத்தறை அணிக்காகவும், அடுத்த 13 நிமிடங்களில் நபீல் பொலிஸ் அணிக்காவும் கோல் பெற, முதல் பாதி தலா ஒரு கோலுடன் சமநிலையடைந்தது.

இரண்டாம் பாதியில் கேஷான் துமிந்து மாத்தறை அணிக்கான அடுத்த கோலைப் பெற்றார். அந்த கோல் பெறப்பட்டு 3 நிமிடங்களில் பொலிஸ் வீரர் ஹஷிக மூலம் ஓன் கோல் ஒன்று பெறப்பட மாத்தறை கால்பந்து கழகம் 2 கோல்களால் முன்னிலை பெற்றது.

பொலிஸ் அணிக்கு மாற்று வீரராக வந்த அன்தனி தனுஜன் போட்டியில் 68ஆவது நிமிடத்தில் பெற்ற கோலே போட்டியில் பெறப்பட்ட இறுதி கோலாக அமைந்தது. எனவே, போட்டி நிறைவில் மாத்தறை சிட்டி அணி 3-2 என வெற்றி பெற்று தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

மாத்தறை சிடி ஏற்கனவே கடந்த வாரம் நிகம்பு யூத் அணியை 2-1 என வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: மாத்தறை சிட்டி கா.க 3 – 2 இலங்கை பொலிஸ் வி.க

சுபர் சன் வி.க எதிர் சோண்டர்ஸ் வி.க

காலி மாவட்ட விளையாட்டு தொகுதி மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் 10 ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணியின் இளம் வீரர் பெதும் கிம்ஹான அவ்வணிக்கான முதல் கோலைப் பெற்றார். அதற்கு பதிலாக 26ஆவது நிமிடத்தில் ஹசித்த பிரியன்கர சுபன் சன் அணிக்கான முதல் கோலைப் பெற்று, இந்த தொடரில் தனது மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.

தொடர்ந்து 36ஆவது நிமிடத்தில் சோண்டர்ஸ் அணியின் தலைவர் இன்த்ரீவ உதார மூலம் ஓன் கோல் ஒன்று பெறப்பட, முதல் பாதியில் சுபர் சன் 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியின் முழு நேரம் வரையில் மேலதிகமாக எந்தவொரு கோலும் பெறப்படாத நிலையில் முதல் போட்டியில் பெலிகன்ஸ் அணியை வீழ்த்திய சுபர் சன் இந்தப் போட்டியிலும் மேலதிக ஒரு கோலினால் வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: சுபர் சன் வி.க 2 – 1 சோண்டர்ஸ் வி.க

நியூ ஸ்டார் வி.க எதிர் செரண்டிப் கா.க

தமது முதல் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் கொழும்பு சுகததாச அரங்கில் இரு அணி வீரர்களும் களம் கண்டனர்.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில் செரண்டிப் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலக்கிய எவான்ஸ் அசன்டெ அடுத்த 3 நிமிடங்களில் தனது அடுத்த கோலையும் பெற்றார். இதனால் இந்த தொடரில் அதிக கோல் பெற்றவராக 5 கோல்களுடன் எவான்ஸ் முதல் இடத்தில் உள்ளார்.

எனினும், செரண்டிப் அணி இரண்டாவது கோலைப் பெற்று 4 நிமிடங்களில் நியூ ஸ்டார் அணிக்கு அனஸ் முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

செரண்டிப் அணியின் முன்னிலையுடன் ஆரம்பமான இரண்டாவது பாதியின் 75ஆவது நிமிடத்தில் எவன்ஸ், இஸ்ஸடீன் ஆகியோர் இடையே மத்திய களத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வந்த சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் இஸ்ஸடீன் செரண்டிப் அணிக்கான ஆடுத்த கோலைப் பெற்றார்.

மீண்டும் நியூ ஸ்டார் அணிக்கு 84ஆவது நிமிடத்தில் ஆதில் இரண்டாவது கோலை பெற்ற போதும் போட்டி நிறைவில் செரண்டிப் மேலதிக ஒரு கோலினால் 3-2 என வெற்றி பெற்று தமது தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

முழு நேரம்: நியூ ஸ்டார் வி.க 2 – 3 செரண்டிப் கா.க

கிறிஸ்டல் பெலஸ் கா.க எதிர் பெலிகன்ஸ் வி.க

கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ரஜிகுமார் சான்தன் பெலிகன்ஸ் அணிக்கான முதல் கோலைப் பெற்றார்.

எனினும், ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் கிறிஸ்டல் பெலஸ் அணியின் வெளிநாட்டு வீரர் ஜிமொஹ் இப்ராஹிம் போட்டியை சமப்படுத்துவதற்கான கோலைப் பெற, ஆட்டம் தலா ஒரு கோலுடன் நிறைவு பெற்றது.

முழு நேரம்: கிறிஸ்டல் பெலஸ் கா.க 1 – 1 பெலிகன்ஸ் வி.க

SLTB வி.க எதிர் சென்.மேரிஸ் வி.க

குருனாகலை மாலிகாபிடிய மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் 55ஆவது நிமிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழக அணி வீரர் சிவராஜா கிறிஷான்தன் அவ்வணிக்காக பெற்ற கோலே வெற்றி கோலாக அமைந்தது.

இது SLTB அணிக்கு முதல் வெற்றியாகவும், சென் மேரிஸ் அணிக்கு தொடரின் இரண்டாவது தோல்வியாகவும் அமைந்தது.

முழு நேரம்: SLTB வி.க 1 – 0 சென்.மேரிஸ் வி.க

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<