தாய்லாந்துக்கு சவால் கொடுத்த இலங்கை அணி

AFC Cup 2023

628
Thailand Football

தாய்லாந்துக்கு எதிராக சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றுக்கான போட்டியில் இலங்கை கால்பந்து அணி சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தி நிலையில் 2-0 என தோல்வி கண்டுள்ளது.  

இலங்கை வீரர்கள் கடந்த 8ஆம் திகதி இந்த தொடரில் தமது முதல் போட்டியில் வரவேற்பு நாடான உஸ்பகிஸ்தானுடன் ஆடி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்த நிலையில் அதே முதல் பதினொருவருடன் இந்த போட்டியிலும் களமிறங்கியது.

தாய்லாந்து வீரர்கள் முதல் ஆட்டத்தில் மாலைதீவுகளை 3-0 என வீழ்த்திய நிலையில் தமது இரண்டாவது வெற்றிக்காக இந்த மோதலில் களமிறங்கினர்.

முதல் போட்டி இடம்பெற்ற அதே மர்கஸிய் அரங்கில் இடம்பெற்ற இந்த மோதலின் ஆரம்பம் முதலே இலங்கை அணி முதல் போட்டியை விட வித்தியாசமான முறையில் கோலுக்கான முயற்சிகளையும் மேற்கொண்டு விளையாடியது.

போட்டி ஆரம்பித்து 5 நிமிடங்களில் தாய்லாந்துக்கு கிடைத்த பிரீ கிக்கை அவ்வணியின் தலைவர் தீரதொன் புன்மதான் பெற்றார். கோல் நோக்கி செல்லும் வகையில் அவர் உதைந்த பந்தை சுஜான் பெரேரா பாய்ந்து வெளியே தட்டினார்.

அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் இலங்கையின் இளம் வீரர் டிலன் டி சில்வா, மத்திய கள்தில் இருந்து உயர்ந்து வந்த பந்தை வந்த வேகத்திலேயே கோல் நோக்கி உதைய, பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.

போட்டியில் தொடர்ந்து கோல் முயற்சிகளை மேற்கொண்ட தாய்லாந்து அணிக்கு ஆட்டத்தின் 34ஆவது நிமிடத்தில், இலங்கை கோல் எல்லையில் இருந்து பிடிவத் கொடுத்த பரிமாற்றத்தினால் திடிபான் புங்ஞான் முதல் கோலைப் பெற்றார்.

முதல் பாதி: இலங்கை 0 – 1 தாய்லாந்து

இரண்டாம் பாதியில் முதல் பாதி போன்றே தாய்லாந்து மிக வேகமான ஆட்டத்தைக் காண்பித்தாலும் இலங்கை வீரர்கள் அவ்வணியின் கோல் வாய்ப்புக்கள் அனைத்தையும் தடுத்தாடினர்.

அதேபோன்று, தாய்லாந்து வீரர்கள் இலங்கை கோல் எல்லையில் இருந்து பெற்ற கோலுக்கான பல உதைகள் கம்பங்களை அண்மித்த வகையில் வெளியில் சென்றது.

60 நிமிடங்கள் கடந்த நிலையில் தாய்லாந்து வீரர்கள் கோலுக்கான முயற்சியாக சுஜானைத் தாண்டி உதைந்த பந்து கோல் நோக்கி செல்லும்போது அதனை ஷலன ஷமீர வேகமாக சென்று அங்கிருந்து திசை திருப்பினார்.

அதேபோன்று, எதிரணி கோலுக்காக எடுத்த மற்றொரு முயற்சியின்போது பந்து கோல் எல்லையை நோக்கி சென்றுகொண்டிருந்த வேளை சுஜான் எல்லையில் வைத்து அதனை மறைத்தார்.

தாய்லாந்து அணிக்கு மாற்று வீரராக வந்த WORACHIT KANITSRIBUMPHEN போட்டியின் இறுதி நிமிடத்தில் பந்தை சக வீரர் சாயாவட் இடம் கொடுத்துவிட்டு கோல் எல்லைக்குள் செல்ல, மீண்டும் சாயாவட் கொடுத்த பந்தினை WORACHIT கம்பங்களுக்குள் செலுத்தி போட்டி நிறைவில் 2-0 என தாய்லாந்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

எனவே, தமது இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்த தாய்லாந்து அணி, தீர்மானம் மிக்க தமது கடைசி ஆட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி உஸ்பகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வி கண்டுள்ள இலங்கை அணி தமது இறுதி மோதலில் ஆறுதல் வெற்றிக்காக 14ஆம் திகதி மாலைதீவுகள் அணியை எதிர்த்தாடவுள்ளது.

முழு நேரம்: இலங்கை 0 – 2 தாய்லாந்து

கோல் பெற்றவர்கள்

தாய்லாந்து – திடிபான் புங்ஞான் 34’, WORACHIT KANITSRIBUMPHEN 90+5’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

தாய்லாந்து – தீரதொன் புன்மதான்’

இலங்கை – சுஜான் பெரேரா 66’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<