மாலைதீவுகளிடமும் வீழ்ந்த இலங்கை வெற்றியின்றி நாடு திரும்புகிறது

AFC Cup 2023

151

மாலைதீவுகளுக்கு எதிராக உஸ்பகிஸ்தானின் மர்கஸிய் அரங்கில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் மூன்றாம் சுற்றுக்கான தமது கடைசிப் போட்டியில் இலங்கை கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தள்ளது.

இதனால், இலங்கை அணி இந்த தகுதிகாண் தொடரில் எந்தவித வெற்றியும் பெறாமல் 3 தோல்விகளுடன் நாடு திரும்புகின்றது.

இதற்கு முன்னர் இந்த தொடரில் இலங்கை வீரர்கள் உஸ்பகிஸ்தான் அணியிடம் 3-0 எனவும், தாய்லாந்து அணியிடம் 2-0 எனவும் தோல்வியடைந்திருந்தனர்.

மாலைதீவுகள் அணி முதல் போட்டியில் 3-0 என தாய்லாந்து அணியிடமும், உஸ்பகிஸ்தானிடம் 4-0 எனவும் தோல்வியடைந்திருந்தது. எனவே, இந்தப் போட்டியானது இவ்விரு அணிகளும் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்காக ஒன்றையொன்று சந்தித்தன.

கடந்த இரண்டு போட்டிகளிலும் மஞ்சள் அட்டை பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுஜான் பெரேராவுக்கு இந்த போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட, கவீஷ் லக்பிரிய பெர்னாண்டோ இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கோல் காப்பாளராக செயற்பட்டார்.

அதேபோன்று, முன்னைய இரண்டு போட்டிகளிலும் முதல் பதினொருவராக விளையாடிய சபீர் ரசூனியா மற்றும் சசன்க டில்ஹார ஆகியோருக்குப் பதிலாக சிரேஷ்ட வீரர் மொஹமட் பசால் மற்றும் மரியதாஸ் நிதர்சன் ஆகியோர் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முதல் பதினொருவரில் களமிறங்கினர்.

இலங்கை முதல் பதினொருவர்

போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணி வீரர்களும் கோலுக்கான முயற்சிக்காக வேகமாக செயற்பட்டனர். குறிப்பாக, இலங்கை அணியைவிட அதிக ஆதிக்கம் செலுத்திய மாலைதீவுகள் வீரர்கள் இலங்கை கோல் எல்லையில் பல கோல் முயற்சிகளை மேற்கொண்டனர்.

எனினும், இரண்டு அணி வீரர்களும் ஒரு முறையாவது எதிரணியின் கோல் காப்பாளர்களை பரிசோதிக்காத நிலையில் முதல் பாதி கோல் இன்றி நிறைவடைந்தது.

முதல் பாதி: இலங்கை 0 – 0 மாலைதீவுகள்

போட்டி 60 நிமிடங்களை அண்மித்த நிலையில் இலங்கை அணிக்கு எதிரணியின் மத்திய களத்தில் இருந்து கிடைத்த ப்ரீ கிக்கின்போது உதைந்த பந்து மாலைதீவுகள் கோல் எல்லைக்கு வெளியில் வைத்து அவ்வணியின் ஹுஸைன் நிஹானின் கைகளில் பட்டமைக்கு இலங்கை அணிக்கு மீண்டும் பிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.

இதன்போது வாய்ப்பைப் பெற்ற மொஹமட் பசால் பாதத்தின் முன் பக்கத்தினால் கோல் நோக்கி செல்லும் வகையில் உதைந்த பந்தை மாலைதீவுகள் கோல் காப்பாளர் பைசால் பாய்ந்து வெளியே தட்டினார்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் மத்திய களத்தில் இருந்து இப்ராஹிம் ஹுஸைன் வழங்கிய பந்துப் ரிமாற்றத்தினால் சிரேஷ்ட வீரர் ஹம்ஸா மொஹமட் இலங்கை கோலுக்கு அருகில் பந்தை எடுத்துச் சென்று கவீஷின் தடுப்புக்கு கீழால் பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

எனினும், அடுத்த சில நிமிடங்களில் இலங்கை அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்து தடுக்கப்பட்டு டிலனிடம் வர, அவர் அதனை இரண்டு வீரர்களைத் தாண்டி முன்னோக்கி எடுத்துச் செல்லும்போது பெனால்டி எல்லைக்குள் வைத்து முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட்டார்.

இதனால் இலங்கை அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை டிலன் பெற்றார். அவர் கோலின் வலது பக்கத்தினால் செலுத்திய பந்தை மாலைதீவுகள் கோல் காப்பாளர் பைசால் தடுக்க, மீண்டும் அதனை ஷமோத் டில்ஷான் ஹெடர் செய்தபோது பந்து உயர்ந்து வெளியே சென்றது. எனவே, இலங்கை அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு பைசாலால் தடுக்கப்பட்டது.

தொடர்ந்து 75 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து டிலன் கோல் நொக்கி உதைந்த பந்து இடது பக்க கம்பத்தை விட சில அங்குலம் வெளியால் சென்றது.

அதன் பின்பும் இரு அணியினரும் கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்த போதும் அவற்றினால் எந்த பயனும் கிடைக்கவில்லை. எனவே, போட்டி நிறைவில் ஹம்ஸாவின் கோலின் உதவியுடன் 1-0 என வெற்றி பெற்ற மாலைதீவுகள் அணி தொடரில் தமது முதல் வெற்றியை சுவைக்க, இலங்கை அணி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் தொடரில் முடித்துக் கொண்டது.

முழு நேரம்: இலங்கை 0 – 1 மாலைதீவுகள்

கோல் பெற்றவர்கள்

  • மாலைதீவுகள்– ஹம்ஸா மொஹமட் 66’

மஞ்சள் அட்டை பெற்றவர்கள்

  • மாலைதீவுகள் – அய்சாம் இப்ராஹிம் 90’
  • இலங்கை – ஷரித்த ரத்னாயக்க 50’

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<