பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் இலங்கை 19 வயதின் கீழ் மகளிர் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
மக்கொன்ன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் தஹமி செனத்மா மற்றும் ஹிருனி ஹன்சிகா ஆகியோர் அதிகபட்சமாக தலா 24 ஓட்டங்களை பெற 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
புதிய செயலியை அறிமுகப்படுத்தும் இலங்கை கிரிக்கெட்!
இந்த ஓட்ட எண்ணிக்கையில் அணித்தலைவி மனுதி நாணயக்கார 16 ஓட்டங்களையும், சஷினி கிம்ஹானி ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து சிறிய பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச்செல்ல முயற்சித்தது. இதில் பஹமிடா சோயா சிறப்பாக ஆடி 38 ஓட்டங்களை பெற்றுத்தந்தார். இவரையடுத்து அணித்தலைவி சுமையா அக்தர் 24 ஓட்டங்களை பெற்றார்.
பின்னர் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை குவிக்கவேண்டிய தேவை என்ற நிலையில் 18 பந்துகளில் 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அபியா அஷிமா 19.4 ஓவர்களில் அணி வெற்றியை உறுதிசெய்ய உதவினார். அதன்படி 19.4 ஓவர்களில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. இலங்கையின் பந்துவீச்சில் ரஸ்மிகா செவ்வந்தி மற்றும் சஷினி கிம்ஹானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதேவேளை நான்கு போட்டிகள் கொண்ட T20 தொடரில் இலங்கை அணி 2-0 என முன்னிலை வகித்த நிலையில், மூன்றாவது போட்டியின் வெற்றியின் ஊடாக பங்களாதேஷ் அணி தொடரை 2-1 என மாற்றியுள்ளதுடன், தொடர் தோல்வியையும் தவிர்த்துள்ளது.
சுருக்கம்
இலங்கை U19 மகளிர் அணி – 109/6 (20), தஹமி செனத்மா 24, ஹிருனி ஹன்சிகா 24, அனீஷா அக்தர் 2/17
பங்களாதேஷ் U19 மகளிர் அணி – 113/6 (19.4), பஹமிடா சோயா 38, சுமையா அக்தர் 24, ரஸ்மிகா செவ்வந்தி 2/17, சஷினி கிம்ஹானி சஷினி கிம்ஹானி 2/22
முடிவு – பங்களாதேஷ் 19 வயதின் கீழ் மகளிர் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<