வெற்றிநடை போடும் மாத்தறை சிடி, செரண்டிப்; சென் மேரிஸ் முதல் வெற்றி

Champions League 2022

482

சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் இரண்டாம் வாரத்திற்கான நான்கு போட்டிகள் சனிக்கிழமை (18) நாட்டின் பல மைதானங்களில் இடம்பெற்றன.

இதில் மாத்தறை சிட்டி கழகம் மற்றும் செரண்டிப் கால்பந்து கழகங்கள் தமது தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்து தோல்வி காணாத அணியாக இருக்கின்றன. அதேபோன்று, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) விளையாட்டுக் கழகம் தமது இரண்டாவது வெற்றியையும் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் தமது முதல் வெற்றியையும் பதிவு செய்துள்ளன.

செரண்டிப் கா.க எதிர் மொறகஸ்முல்ல வி.க

கண்டி போகம்பரை விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியின் இறுதி 4 நிமிடங்களில் செரண்டிப் வீரர்கள் அடுத்தடுத்து 3 கோல்களைப் பெற்றனர்.

அந்த அணி எதிரணியின் மத்திய களத்திலும் முன்களத்திலும் மேற்கொண்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் முதல் கோலை எவன்ஸ் பெற, அடுத்த இரண்டு கோல்களையும் சிரேஷ்ட வீரர் இஸ்ஸடீன் பெற்றுக் கொடுத்தார்.

எனினும், இரண்டாம் பதியில் செரண்டிப் வீரர்கள் கோலுக்கான அதிகமான வாய்ப்புக்களை சிறந்த முறையில் நிறைவு செய்யத் தவறியமையினால் போட்டி நிறைவுவரை எந்தவொரு மேலதிக கோலும் பெறப்படவில்லை. அதேபோன்று, செரண்டிப் கோல் காப்பாளர் லுத்பி மற்றும் பின்கள வீரர்கள் மேற்கொண்ட சிறந்த தடுப்பாட்டத்தின் காரணமாக மொறகஸ்முல்ல வீரர்களால் எந்தவொரு கோலையும் பெற முடியாமல் போனது.

எனவே, 3-0 என வென்ற செரண்டிப் கால்பந்து கழகம் தொடரில் தமது மூன்றாவது வெற்றியையும் பதிவுசெய்து தோல்வி காணாத அணியாக இருக்கின்றது. மொறகஸ்முல்ல அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

முழு நேரம்: செரண்டிப் கா.க 3 – 0 மொறகஸ்முல்ல வி.க

பெலிகன்ஸ் வி.க எதிர் மாத்தறை சிட்டி கா.க

பெலிகன்ஸ் அணியின் சொந்த மைதானமான குருனாகலை மாலிகாபிடிய அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் சுஜீவன் பெற்ற கோலினால் பெலிகன்ஸ் முன்னிலை பெற்றது.

எனினும், இரண்டாம் பாதியின் 60 நிமிடங்களின் பின்னர் மாத்தறை சிடி கழகம் இளம் வீரர் கேஷான் மற்றும் வெளிநாட்டு வீரர் லார்பி பிரின்ஸ் ஆகியோர் பெற்ற கோலினால் ஆட்ட நிறைவில் மாத்தறை சிட்டி வீரர்கள் மேலதிக ஒரு கோலினால் வெற்றி பெற்று, தமது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தனர். பெலிகன்ஸ் வீரர்கள் தமது சொந்த மைதானத்தில் பெறும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

 முழு நேரம்: பெலிகன்ஸ் வி.க 1 – 2 மாத்தறை சிட்டி கா.க

சென் மேரிஸ் வி.க எதிர் சுபர் சன் வி.க

சம்பியன்ஸ் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் முதல் போட்டியாக இந்தப் போட்டி ஆரம்பமானது. ஆட்டத்தின் முதல் பாதியில் இளம் வீரர் ஜெரின்சன் மற்றும் வெளிநாட்டு வீரர் எலொஹொர் ஆகியோர் மூலம் சென் மேரிஸ் அணி இரண்டு கோல்களைப் பெற, சுபர் சன் அணி தமது நட்சத்திர வீரர் ஹசித்த பிரின்கர மூலம் ஒரு கோலைப் பெற்றது.

தொடர்ந்த இரண்டாவது பாதியில் தேசிய அணியின் முன்னாள் வீரர் ஞானரூபன் மற்றும் மாற்று வீரராக வந்த அபினேஷ் ஆகியோர் தலா ஒரு கோலைப் பெற்றனர். மறுமுனையில் ஹசித்த தனது இரண்டாவது கோலையும் பெற்ற போதும், போட்டி நிறைவில் யாழ் வீரர்கள் மேலதிக இரண்டு கோல்களால் வெற்றி பெற்று, யாழ்ப்பாண ரசிகர்கள் முன்னிலையில் இந்த தொடரில் தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

முழு நேரம்: சென் மேரிஸ் வி.க 4 – 2 சுபர் சன் வி.க

SLTB வி.க எதிர் கிறிஸ்டல் பெலஸ் கா.க

சுகததாஸ அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில் SLTB வீரர் நுஸ்ரி பெற்ற கோலே போட்டியின் வெற்றி கோலாக மாறியது. எனினும், கிறிஸ்டல் பெலஸ் வீரர்கள் தமக்கு கிடைத்த அதிகமான கோல் வாய்ப்புக்களை வீணடித்தமை இந்த போட்டியில் அவர்களது தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

முழு நேரம்: SLTB வி.க 1 – 0 கிறிஸ்டல் பெலஸ் கா.க  

>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<