2021இல் இலங்கை வீரர்களுக்கு அதிகளவான மெய்வல்லுனர் தொடர்கள்

Athletics Calendar - 2021

130

2021ஆம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் அட்டவணையை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த வருடத்தின் முதலாவது மெய்வல்லுனர் போட்டியாக தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற மரதன் ஓட்டப் போட்டி பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியின் மூலம் தேசிய மரதன் குழாத்துக்கான வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இராணுவ அஞ்சலோட்ட திருவிழா மார்ச் மாதம் 17 மற்றும் 18ஆம் திகதிகளிலும், இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளது. 

மெய்வல்லுனர்‌ ‌‌விளையாட்டுக்காக‌ ‌‌தயாராகும்‌ ‌’‌MASS‌’‌ ‌‌ஆன‌ ‌ வேலைத்திட்டம்

இலங்கையில் உள்ள 90 சதவீதமான மெய்வல்லுனர்கள் இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வருவதால் மார்ச் மாதம் முழுவதும் இராணுவ மெய்வல்லுனர் தொடருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனிடையே, மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனாவின் ஹாங்சோவில் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியனஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியாக தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது.

அதேபோல, மே மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை தாய்லாந்தின் பட்டாயாவில் நடைபெறவுள்ள ஆசிய உள்ளக மற்றும் தற்காப்புக் கலை விளையாட்டு விழாவில் இலங்கை மெய்வல்லுனர்களுக்கு பங்கேற்பதற்கான சிறந்த வாய்ப்பாக ஏப்ரல் மாதம் நடைபெறும் தேசிய மெய்வல்லுனர் தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இரண்டு தமிழ் பேசுகின்ற வீரர்கள்

அதுமாத்திரமின்றி, மேலே குறிப்பிட்ட இரண்டு மெய்வல்லுனர் தொடர்களிலும் திறமைகளை வெளிப்படுத்தினால், உலக மெய்வல்லுனர் தரவரிசையில் புள்ளிகளைப் பெற்று ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு இலங்கை வீரர்ளுக்கு நேரடியாக தகுதியினை பெற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், மே மாதம் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் போலந்தில்  நடைபெறவுள்ள உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பின் போது, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு இலங்கை அஞ்சலோட்ட அணிகளுக்கு கிடைக்கவுள்ளது. 

இதில் முதல் எட்டு இடங்களைப் பெற்றுக்கொள்கின்ற நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் இரு மெய்வல்லுனர் தொடர்கள் ஒத்திவைப்பு

மறுபுறத்தில், இவ்வருடம் தாய்லாந்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுமா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. 

அந்தத் தொடர் நடைபெறும் பட்சத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொள்கின்ற நாடுகள் நேரடியாக, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

அதேபோல, ஆசிய கிராண்ட் ப்ரிக்ஸ் மெய்வல்லுனர் தொடரை ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு முன் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், அதற்கான திகதி மற்றும் இடம் என்பன இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதுதவிர, ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக்கொண்டு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் ஆசிய மற்றும் ஐரோப்பியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் தொடர்களில் பங்குபற்றுவதற்கான சந்தர்ப்பத்தை, இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர் வீரர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்கவுள்ளது. 

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?

இதில் புரூணை, வியட்நாம் மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள திறந்த மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர்கள் முக்கிய இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன.

இதேவேளை, அக்டோபர் மாதம் 16ஆம் மற்றும் 17ஆம் திகதிகளில் தேசிய மெய்வல்லுனர் குழாத்துக்கான தகுதிகாண் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்கள் 2022இல் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் பொதுநலவாய விளையாட்டு விழா ஆகியவற்றுக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்கள். 

இதேநேரம், ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை கென்யாவில் நடைபெறவுள்ள உலக ஜுனியர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக்கொண்டு தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை மே மாதம் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு

அத்துடன், எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியாகவும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் அமையவுள்ளது. ஆனால், குறித்த தொடர் கொவிட் – 19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸ் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன தேசிய விளையாட்டு விழா, தேசிய இளைஞர் விளையாட்டு விழா, அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா, சேர். ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடர் என்பன செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் – 19 வைரஸ் காரணமாக இந்த வருடம் நடைபெறவிருந்த ஆசிய மரதன் சம்பின்ஷிப் மற்றும் ஆசிய கடற்கரை விளையாட்டு விழா என்பன ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<