இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் முதல்தர கிரிக்கெட் சுற்றுப்போட்டியான பிரீமியர் லீக் தொடரில் சோனகர் விளையாட்டுக் கழக அணியுடனான போட்டியில் ராகம கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளினால் இலகு வெற்றியை சுவீகரித்து.

சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

இவ்விரண்டு அணிகளுக்குமிடையிலான போட்டி நேற்று முன்தினம் கொழும்பு சோனகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சோனகர் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரிமோஷ் பெரேரா 64 ஓட்டங்கள் குவிக்க, அவ்வணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ராகம அணியின் அமில அபொன்சோ 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அடுத்து களமிறங்கிய ராகம கிரிக்கெட் கழகம் சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய உதார ஜயசுந்தர 112 ஓட்டங்கள் குவித்தார். அவரைத் தவிர லஹிரு மிலந்த (63) மற்றும் ரொஷேன் சில்வா (79) ஆகியோர் அரைச்சதம் கடக்க, ராகம கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 361 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. சிறப்பாக பந்துவீசிய சோனகர் விளையாட்டுக் கழகத்தின் சச்சித்ர பெரேரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி முதல் இன்னிங்சில் 144 ஓட்டங்களினால் பின்னிலை வகித்த சோனகர் விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. பந்துவீச்சில் பிரகாசித்த சஹன் நாணயக்கார 6 விக்கெட்டுகளை சாய்க்க, அவ்வணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் ருவிந்து குணசேகர மற்றும் தரிந்து மெண்டிஸ் ஆகியோர் அரைச்சதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

இதன்படி ராகம அணிக்கு 38 என்ற சுலபமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. துரிதமாக ஓட்ட இலக்கைக் கடந்த ராகம கிரிக்கெட் கழகம் 5.5 ஓவர்களில் விக்கெட் இழப்பேதுமின்றி 40 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 217 (55.2) – ப்ரிமோஷ் பெரேரா 64, அமில அபொன்சோ 4/40

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 361 (86.2) – உதார ஜயசுந்தர 112, ரொஷேன் சில்வா 79, லஹிரு மிலந்த 63, லஹிரு திரிமாண 43, சச்சித்ர பெரேரா 5/119 

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 181 (57.3) – ருவிந்து குணசேகர 57, தரிந்து மெண்டிஸ் 52, சஹன் நாணயக்கார 6/55

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 40/0 (5.5)

முடிவு: ராகம கிரிக்கெட் கழகம் 10 விக்கெட்டுகளினால் வெற்றி.


பதுரேலிய விளையாட்டுக் கழகம் எதிர் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம்

இப்போட்டி நேற்று முன்தினம் புளூம்பீல்ட் கிரிக்கெட் கழக மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.

அதன்படி களமிறங்கிய பதுரேலிய விளையாட்டுக் கழகத்தின் ஏழு வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஓய்வறை திரும்ப, அவ்வணி 156 ஓட்டங்களுக்கே சுருண்டது. பந்துவீச்சில் அசத்திய மலித் டி சில்வா 41 ஓட்டங்களை வழங்கி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய புளூம்பீல்ட் அணி சார்பாக அசத்தலாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் நிபுன் கருணாநாயக்க 108 ஓட்டங்களையும் அதீஷ நாணயக்கார 79 ஓட்டங்களையும் பெற்று அணியை முன்னிலைக்கு இட்டுச்சென்றனர்.

எனினும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, புளூம்பீல்ட் அணி 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. அவ்வணியின் இறுதி ஏழு விக்கெட்டுகள் 46 ஓட்டங்களுக்கு வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

அதன்படி 77 ஓட்டங்களினால் பின்னிலை பெற்றுக் கொண்ட பதுரேலிய விளையாட்டுக் கழகம் இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. இம்முறை முன்னேற்றகரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பதுரேலிய அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 337 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

மீண்டும் துடுப்பாட்டத்தில் அசத்திய ஷெஹான் பெர்னாண்டோ 86 ஓட்டங்களையும், நதீர நாவல 71 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். இரண்டாவது இன்னிங்சிலும் பந்துவீச்சில் சிறப்பித்த மலித் டி சில்வா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி புளூம்பீல்ட் அணிக்கு 261 என்ற ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நிசல் பிரான்சிஸ்கோ 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், லஹிரு ஜயகொடி மற்றும் அதீஷ நாணயக்கார ஆகியோர் அரைச்சதங்கள் கடக்க, புளூம்பீல்ட் அணி இலக்கை நெருங்கி வந்தது. எனினும் ஆட்டம் நிறுத்தப்படும் போது அவ்வணியினால் 6 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களையே பெற முடிந்தது.

அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. பந்துவீச்சில் அலங்கார அசங்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 156 (51) – விஷ்வ விஜேரத்ன 47, ஷெஹான் பெர்னாண்டோ 46, மலித் டி சில்வா 5/41

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 233 (68.1) – நிபுன் கருணாநாயக்க 108, அதீஷ நாணயக்கார 79, அலங்கார அசங்க 4/50

பதுரேலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 337/7 (71.5) – ஷெஹான் பெர்னாண்டோ 86, நதீர நாவல 71, லக்கண ஜயசேகர 53, சச்சின் ஹேவாவசம் 48, மலித் டி சில்வா 4/112,

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 248/6 (67.3) – நிசல் பிரான்சிஸ்கோ 88, லஹிரு ஜயகொடி 58, அதீஷ நாணயக்கார 58, அலங்கார அசங்க 4/91

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


NCC எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

இவ்விரு அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று முன்தினம் NCC மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற NCC அணி முதல் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அவ்வணியின் தொடக்க வீரர் சந்துன் வீரக்கொடி 113 ஓட்டங்களை விளாசினார். மேலும் நிமேஷ குணசிங்க (64) மற்றும் நிரோஷன் திக்வெல்ல (51) ஆகியோர் அரைச்சதம் கடக்க, NCC அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 385 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசத்திய சிலாபம் மேரியன்ஸ் அணியின் மலிந்த புஷ்பகுமார 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து ஆடுகளம் பிரவேசித்த சிலாபம் மேரியன்ஸ் அணியின் தலைவர் மஹேல உடவத்த சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி 89 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அவரைத் தவிர விதுர அதிகாரி 64 ஓட்டங்களையும், இசுரு உதான 40 ஓட்டங்களையும் குவித்தனர். எனினும் அபாரமான பந்துவீச்சில் ஈடுபட்ட தரிந்து கௌஷால் 6 விக்கெட்டுகளை பதம்பார்க்க, சிலாபம் மேரியன்ஸ் அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்படி முதல் இன்னிங்சில் 100 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட NCC அணி இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. சிறப்பாக பந்துவீசிய மதுக லியனபதிரனகே மற்றும் மலிந்த புஷ்பகுமார தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்த, NCC அணி 199 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் சதுரங்க டி சில்வா அதிகபட்சமாக 47 ஓட்டங்களை குவித்தார்.

இதன்படி சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு 300 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மீண்டுமொருமுறை அபாரமாக பந்துவீசிய தரிந்து கௌஷால் 5 விக்கெட்டுகளை சாய்க்க, சிலாபம் மேரியன்ஸ் அணி தடுமாறியது.

எனினும் மயிரிழையில் தோல்வியை தவிர்த்துக் கொண்ட அவ்வணி, போட்டி நிறுத்தப்படும் போது 9 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை பெற்றிருந்தது. அவ்வணி சார்பாக அரோஷ் ஜனோத அதிகபட்சமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 385 (88.1) – சந்துன் வீரக்கொடி 113, நிமேஷ குணசிங்க 64, நிரோஷன் திக்வெல்ல 51, பவன் விக்ரமசிங்க 46, எஞ்சலோ பெரேரா 45, மலிந்த புஷ்பகுமார 5/74

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 285 (68.3) – மஹேல உடவத்த 89, விதுர அதிகாரி 64, இசுரு உதான 40, தரிந்து கௌஷால் 6/78

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 199 (50.4) – சதுரங்க டி சில்வா 47, மதுக லியனபதிரனகே 4/54, மலிந்த புஷ்பகுமார 4/59

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 193/9 (56) – அரோஷ் ஜனோத 40, தரிந்து கௌஷால் 5/53

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


BRC எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய செரசன்ஸ் அணியின் மூன்று வீரர்கள் அரைச்சதம் கடந்தனர். சிறப்பாக பந்துவீசிய BRC அணியின் தினுக ஹெட்டியாரச்சி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதனைத் தொடர்ந்து BRC அணி தமது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கியது. சிறப்பாக பந்துவீசிய கசுன் ராஜித (5/72) மற்றும் சுராஜ் ரந்திவ் (4/58) தமக்கிடையே 9 விக்கெட்டுகளை பங்கிட்டுக்கொள்ள, BRC அணி 197 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பாக தேஷான் டயஸ் அதிகபட்சமாக 32 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

அதன்படி 105 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட செரசன்ஸ் அணி இரண்டாவது இன்னிங்சிற்காக களமிறங்கியது. அற்புதமாக துடுப்பெடுத்தாடிய தொடக்க வீரர் இரோஷ் சமரசூரிய 110 ஓட்டங்கள் விளாசிய போதிலும், ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்காததால் அவ்வணி 212 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன்படி 318 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய BRC அணி, போட்டி நிறுத்தப்படும் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ஓட்டங்களை பெற்று போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திலகரத்ன சம்பத் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (79.5) – உமேஷ் கருணாரத்ன 84, இரோஷ் சமரசூரிய 72, தெனுவன் ராஜகருண 69, தினுக ஹெட்டியாரச்சி 5/96

BRC (முதல் இன்னிங்ஸ்) – 197 (74.3) – தேஷான் டயஸ் 32, கசுன் ராஜித 5/72, சுராஜ் ரந்திவ் 4/58

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 212 (62.4) – இரோஷ் சமரசூரிய 110

BRC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 183/3 (32) – திலகரத்ன சம்பத் 100*

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம்

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கொழும்பு கிரிக்கெட் கழகம் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. சச்சித் பதிரன மற்றும் லஹிரு மதுஷங்க ஆகியோர் அரைச்சதம் கடக்க, கொழும்பு கிரிக்கெட் கழகம் சகல விக்கெட்டுகளையும் இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் அசேல குணரத்ன மற்றும் துஷான் விமுக்தி தலா 3 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர்.

பந்துவீச்சில் அசத்திய இலங்கை அணி வீரர் லக்ஷான் சந்தகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இராணுவ அணி தமது முதல் இன்னிங்சில் 216 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணி சார்பில் தனித்து போராடிய துஷான் விமுக்தி 78 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி முதல் இன்னிங்சில் 2 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றுக் கொண்ட கொழும்பு கிரிக்கெட் கழகம், இரண்டாவது இன்னிங்சில் முன்னேற்றகரமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியது. அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் ரொன் சந்திரகுப்த 116 ஓட்டங்களையும் அஷான் பிரியன்ஜன் 78 ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ள, அவ்வணி 7 விக்கெட்டுகளை இழந்து 309 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதன்படி இலங்கை இராணுவ விளையாட்டுக் கழக அணிக்கு 312 என வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போட்டி நிறுத்தப்படும் போது 7 விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்களை பெற்றிருந்த இராணுவ அணி போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது. சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அசேல குணரத்ன ஆட்டமிழக்காது 93 ஓட்டங்களை பெற்றிருந்தார். பந்துவீச்சில் சச்சித் பதிரன 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 218 (56.3) – சச்சித் பதிரன 54, லஹிரு மதுஷங்க 50*

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 216 (82.1) – துஷான் விமுக்தி 78, லக்ஷான் சந்தகன் 4/71

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 309/7d (74) – ரொன் சந்திரகுப்த 116, அஷான் பிரியன்ஜன் 78

இலங்கை இராணுவ விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 227/7 (60) – அசேல குணரத்ன 93, சச்சித் பதிரன 5/78

முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.