மன்னிப்புக் கேட்டார் மெதிவ்ஸ்

1828

ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வி முழு அணிக்கும் ஏமாற்றத்தை தந்ததாக குறிப்பிட்டிருக்கும் இலங்கை அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், முழு நாட்டையும் கீழே தள்ளியதற்காக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஐந்து முறை ஆசிய சம்பியனான இலங்கை அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 91 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.

>> அதிர்ச்சி தோல்வியுடன் ஆசியக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரின் ஆரம்ப போட்டியில் பங்களாதேஷிடமும் தோற்ற இலங்கை அணி, அடுத்தடுத்த தோல்விகளால் தொடரின் ஆரம்ப சுற்றுடனேயே வெளியேறியுள்ளது.

“இவ்வாறான போட்டி தொடர் ஒன்றில் இவ்வாறான இரு அணிகளிடம் தோல்வி அடைந்து எமது அணி வெளியேறியது மிகப்பெரிய ஏமாற்றத்தை தருகிறது. முழு அணிக்கும், அதேபோன்று எனக்கும் பயிற்சியாளருக்கும் பெரும் ஏமாற்றமாக உள்ளது.

இந்த தருணத்தில் நாம் முழு நாட்டையும் கிழே தள்ளிவிட்டோம். அதற்காக நாம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்” என்று ஆசிய கிண்ண தொடரில் இலங்கை அணி சந்தித்த தோல்வி பற்றி அணித்தலைவர் மெதிவ்ஸ் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இந்த தொடரின் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் மோசமாக செயற்பட்டது. பங்களாதேஷுடனான முதல் போட்டியில் 262 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 124 ஓட்டங்களுக்கே சுருண்டதோடு ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்தில் 250 ஓட்ட வெற்றி இலக்கை எட்ட முயன்றபோது 158 ஓட்டங்களுக்கே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

>> ஆப்கானிஸ்தானுடான போட்டி அழுத்தங்களைக் கொடுக்கும் – மெதிவ்ஸ்

“நாம் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியிலும் நாம் 150 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தோம். இந்தப் போட்டியிலும் அதுதான் நடந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் சரியாக ஆடவில்லை.

துடுப்பாட்ட வீரர்களாலேயே இந்த போட்டிகள் இரண்டிலும் நாம் தோல்வியை சந்தித்தோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். எமது களத்தடுப்பு உயர்ந்த நிலையில் இருக்காதபோதும் இந்த ஆடுகளங்களில் 250 ஓட்டங்களை துரத்த முடியுமாக இருந்தது. எனவே, துடுப்பாட்ட வீரர்கள் தான் இந்த இரண்டு போட்டிகளையும் தோல்வியடையச் செய்தார்கள்” என்றார் மெதிவ்ஸ்.

கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக ஸ்திரமான ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த இலங்கை அணி தடுமாறி வருகிறது. அணித் தலைவர்களின் மற்றம் மற்றும் பயிற்சியாளர் மாற்றம், அதேபோன்று வீரர்களின் காயங்கள் என்று உறுதியான அணி ஒன்றை கட்டி எழுப்புவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக இலங்கையின் ஆரம்ப வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறி வருகின்றனர். இந்த ஆண்டு இலங்கை அணி ஆடிய 12 ஒருநாள் போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் மாத்திரமே ஆரம்ப விக்கெட்டுக்கு அரைச்சத இணைப்பாட்டங்கள் எட்டப்பட்டுள்ளன. உபுல் தரங்கவுடன் இந்த தொடரில் ஆரம்ப வீரராக களமிறங்கிய குசல் மெண்டிஸ் இரண்டு போட்டிகளிலும் ஓட்டம் பெறாமலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.  

“கடந்த ஏழு போட்டிகளையும் பார்த்தோம் என்றால் எமக்கு நல்ல ஆரம்பம் ஒன்று கிடைக்கவில்லை. இரண்டு போட்டிகளில் 50 ஓட்ட இணைப்பாட்டம் கிடைத்தபோது நாம் 300 ஓட்டங்களை துரத்தினோம்.

ஆனால், அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும்போது சில சந்தர்ப்பங்களில் சில வீரர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கினோம்” என்று மெதிவ்ஸ் ஒப்புக்கொண்டார்.

இலங்கை அணி அடுத்து வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தனது சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து ஒருநாள், ஒரு டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னரான ஏற்பாடுகள் குறித்து மெதிவ்ஸ் கருத்து தெரிவித்தார்.

“ஒரு சந்தர்ப்பம் வரும் அந்த சந்தர்ப்பத்தின்போது பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான நடவடிக்கையை எடுப்போம். இங்கிலாந்து தொடருக்கு முன்னர் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் அது பற்றி பேசுவதற்கு தற்போது எமக்கும் சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. எனவே பயிற்சியாளர் மற்றும் தெரிவுக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவொன்றை எடுக்க எதிர்பார்த்திருக்கிறேன்” என்று மெதிவ்ஸ் கூறினார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<