இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?

The 98th National Athletics Championship - 2020

208

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் கடந்த சனிக்கிழமை (26) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.  

பார்வையாளர்கள் இன்றி வெறுமனே போட்டியாளர்களுடன் வித்தியாசமானதும், அமைதியுமான முறையில் நடைபெற்ற இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிகளில் சுமார் 150 மெய்வல்லுனர்கள் பங்குபற்றினர்.

அத்துடன், கடந்த காலங்களில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 23 தமிழ் பேசுகின்ற வீரர்கள் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர். இதில் 16 வீரர்களும் 7 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். 

தேசிய மெய்வல்லுனர் குறும்பட்டியலில் 23 தமிழ் பேசும் வீரர்கள்

இதன்படி, கொழும்பு வரும் வெளி மாவட்ட வீரர்களுக்கு டொரிங்டனில் உள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் விடுதி மற்றும் சுகததாச ஹோட்டல் ஆகியவற்றில் தங்குவதற்கான வசதிகளை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் ஏற்படுத்திக் கொடுத்தது

எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் சுகாதாரப் பிரிவின் கடுமையான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபெறும் வாய்ப்பை வட பகுதியைச் சேர்ந்த மெய்வல்லுனர்கள் தவறவிட்டுள்ளார்கள்.  

அதேபோல, கிழக்கு மாகாணத்தின் நட்சத்திர வீரர்களான மொஹமட் ஷ்ரப் மற்றும் ரஜாஸ்கான் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இருப்பதால் அவர்களாலும் இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்ற முடியாது போய்விட்டது

இதில் குறிப்பாக, அண்மைக்காலமாக மைதான நிகழ்ச்சிகளில் ஒன்றான கோலூன்றிப் பாய்தலில் தேசிய ரீதியில் திறமைகளை வெளிப்படுத்திய வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த . புவிதரன் மற்றும் எஸ். சுகிகேரதன் ஆகிய இருவரும் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய சம்பியனான அனித்தா ஜெகதீஸ்வரன் மற்றும் என். டக்சிதா, சி. தீபிகா, சி. ஹெரினா மற்றும் வி. விசோபிதா ஆகிய ஐந்து வீராங்கனைகளும் யாழ்ப்பாணத்தில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்புக்கு வருவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்

சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

இதன்காரணமாக, துரதிஷ்டவசமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை வடக்கு மாகாண வீரர்கள் இழந்துள்ளனர். இது, குறித்த போட்டிகளில் பதக்கங்களை வெற்றி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வடக்கு வீரர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது.  

குறிப்பாக, கோலூன்றிப் பாய்தல் வீரர் முருகைய்யா, தட்டெறிதல் வீரர் ஆஷிக் ஆகியோர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இம்முறை போட்டித் தொடரில் பங்குகொண்ட ஓரிரு வீரர்களாக இருந்தாலும் அவர்கள்  பதக்கங்களை வென்றமை சிறப்பம்சமாகும்.   

இவ்வாறான ஒரு நிலையில் இதுதொடர்பில், இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றவிருந்த ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய கனிஷ் சம்பியன் .புவிதரனின் பயிற்சியாளர் கணாதீபன் எமக்கு வழங்கிய செவ்வியில்

”உண்மையில் இந்த வருடத்தில் நடைபெறுகின்ற முதலாவது தேசிய மட்ட மெய்வல்லுனர் தொடர் என்பதால் எமது வீரர்கள் இதில் பங்குபற்றுவதற்கு ஆர்வத்துடன் இருந்தார்கள்.  

எனினும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்று மீண்டும் யாழ். வருகின்ற அனைவரும் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என எமது பகுதியில் சுகாதாரப் பிரிவு அறிவித்திருந்தது.

அனித்தாவின் தேசிய சாதனையை முறியடிப்பு: ஆஷிக்கிற்கு தங்கம்

எனவே, எமது வீரர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை கொழும்புக்கு அனுப்புவதை விரும்பவில்லை. அதேபோல, நாங்கள் பயிற்சியாளர்களாக பிள்ளைகளை கொழும்புக்கு அழைத்து வந்தால் தங்குமிடம் மற்றும் சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை தருவார்களாக என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் நாங்கள் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்குபற்றவில்லை” என அவர் தெரிவித்தார்.   

இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸுக்குப் பிறகு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வீரர்களுக்கு பயிற்சிகளை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது

எனினும், வட பகுதியைச் சேர்ந்த வீரர்களுக்கு இதுவரை எந்தவொரு அனுமதியும் வழங்பப்படவில்லை என யாழ். ஹார்ட்லி கல்லூரியின் மெய்வல்லுனர் பயிற்சியாளர் ஹரிஹரன் தெரிவித்தார்.

”தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பகுதியில் உள்ள பாடசாலை வீரர்களே அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

ஆனாலும், வட பகுதியில் உள்ள மெய்வல்லுனர் விளையாட்டை முன்னெடுத்து வருகின்ற பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சோ அல்லது விளையாட்டுத்துறை அமைச்சோ இதுவரை எந்தவொரு அனுமதியையும் வழங்கவில்லை. உண்மையில் இது கவலையளிக்கிறது. இதுதொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்

200 மீற்றரில் வெள்ளிப்பதக்கம் வென்ற சபான்! : சாரங்கி தேசிய சாதனை

இதுஇவ்வாறிருக்க, வடக்கு மாகாணத்தில் இருந்து கோலூன்றிப் பாய்தலில் தேசிய அளவில் முன்னணி வீரர்களை உருவாக்கிய கௌரவத்தைப் பெற்றுக்கொண்டுள்ள பயிற்சியாளர் சின்னையா சுபாஸ்கரன் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில்,

”என்னிடம் பயிற்சி பெறுகின்ற அனித்தா ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட சில பிள்ளைகளும் இம்முறை தேசிய மெய்வல்லுனரில் பங்குபற்றுவதற்கு தேர்வாகியிருந்தார்கள். எனினும், தற்போதுள்ள கொரோனா தொற்று காரணமாக பிள்ளைகளின் பெற்றோர்கள் கொழும்புக்கு அனுப்புவதை விரும்பவில்லை.

அதிலும், குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக நாங்கள் இதுவரை எந்தவொரு பயிற்சிகளையும் எடுக்கவில்லை. அதற்கு எங்களுக்கு பாடசாலையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அதனால் நாங்கள் இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்துகொள்ளவில்லை” என தெரிவித்தார்.   

எதுஎவ்வாறாயினும், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம், இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட தேவைகளை வழங்குவதாக இந்தத் தொடர் ஆரம்பமாவதற்கு முன் அறிவித்திருந்தது

டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு

ஆனாலும், கொவிட் – 19 வைரஸின் அச்சுறுத்தலால் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றவிருந்த வடக்கு மற்றும் கிழக்கு வீரர்களுக்கு இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்ற முடியாமல் போனது மிகப் பெரிய ஏமாற்றத்தைப் கொடுத்துள்ளதாக பெரும்பாலான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

ஒருபுறத்தில் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் பல தடைகளையும் தாண்டி எப்படியாவது இந்த வருடத்துக்கான தேசிய மெய்வல்லுனர் போட்டிகளை நடத்தியது பாராட்டத்தக்க விடயமாக பார்க்கப்பட்டாலும், மறுபுறத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பேசுகின்ற வீரர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாகப் பார்கப்படுகின்றது.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<