மெய்வல்லுனர்‌ ‌‌விளையாட்டுக்காக‌ ‌‌தயாராகும்‌ ‌’‌MASS‌’‌ ‌‌ஆன‌ ‌ வேலைத்திட்டம்‌

112
Long Term Project for Athletes

மெய்வல்லுனர் விளையாட்டை தேசிய ரீதியில் மேம்படுத்துவதற்கான நீண்டகால திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் அதன் பயிற்சியாளர்களை பலப்படுத்துகின்ற நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.

இதன்மூலம், அடுத்த வருடம் சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா, இந்த வருடம் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகிய போட்டித் தொடர்களை இலக்காகக் கொண்டு பயிற்சி பெறும் 21 மெய்வல்லுனர் வீரர்கள் பயனடையவுள்ளார்கள்.

கடந்த ஓரிரு வருடங்களில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி மெய்வல்லுனர்களுக்கான உலக தரவரிசையில் இடம்பெற்றுள்ள, அண்மைக்காலஙங்களில் வெளிப்படுத்திய திறமைகளை அடிப்படையாக வைத்து குறித்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

>> தேசிய மெய்வல்லுனரில் பிரகாசித்த வீரர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்

அந்தந்த மெய்வல்லுனர் வீரர்களின் பதினான்கு பயிற்சியாளர்களும் இந்த செயல் திட்டத்தின் ஊடாக மதிப்பீடு செய்யப்படுவார்கள். இந்த மதிப்பீடானது மூன்று தலைமைப் பயிற்சியாளர்கள் மூலம் மேற்பார்வை செய்யப்படும்.

அதுமாத்திரமின்றி, இந்த திட்டத்தின் படி, மெய்வல்லுனர் வீரர்களுக்கு நிதி உதவி மற்றும் பயிற்சிகளை பெறுவதற்கான தங்குமிட வசதிகளுடன், நாட்டில் உள்ள முன்னணி பயிற்சியாளர்களின் மேற்பார்வையின் கீழ் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கவுள்ளது

விளையாட்டுத்துறை அமைச்சு, இலங்கை மெய்வல்லுனர் சங்கம் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழு ஆகியவற்றின் நேரடி மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற இந்த விசேட வேலைத்திட்டமானது எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வரவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

மேலும், நாட்டில் உள்ள முன்னணி மெய்வல்லுனர் பயிற்சியாளர்கள் இந்த திட்டத்தை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.

>> புத்தாண்டின் ஆரம்பத்தில் இரு மெய்வல்லுனர் தொடர்கள் ஒத்திவைப்பு

மெய்வல்லுனர் வீரர்களின் நற்பணி மன்றம் இந்த வேலைத்திட்டத்தை வகுப்பதில் முன்நின்று செயற்பட்டுள்ளதுடன், சுயாதீனமான முறையில் தமது பங்களிப்பினை வழங்கவும் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இந்தத் திட்டத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் நேற்றுமுன்தினம் (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போது சாதகமான பதில் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் பிரதிநிதிகள், தேசிய ஒலிம்பிக் குழுவின் பிரதிநிதிகள், விளையாட்டு மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினர்கள், விளையாட்டு நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தன, அதன் உறுப்பினர்களான ஜூலியன் போலிங், டிலந்த மாலகமுவ உள்ளிட்ட தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<