டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆறு இலங்கை வீரர்கள் தேர்வு

215

எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ள டோக்கியோ பரா ஒலிம்பிக்கில் பங்கேற்க இலங்கையிலிருந்து இதுவரை ஆறு வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளதாக தேசிய பரா ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.  

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அண்மையில் நிறைவுக்கு வந்த பரா வீரர்களுக்கான தகுதிகாண் போட்டியின் டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவுமட்டத்தினை ஐந்து வீரர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்

இதில் ஈட்டி எறிதல் வீரரான தினேஷ் ப்ரியன்த ஏற்கனவே டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

ஒரு வருடத்தின் பின் நடைபெறவுள்ள தேசிய மெய்வல்லுனர் போட்டிகள்

கையொன்றை இழந்த அல்லது கையின் மேல் பகுதி ஊனமுற்ற பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 13.2 செக்கன்களில் நிறைவுசெய்தவரும், அதே போட்டிப் பிரிவில் பெண்களுக்கான நீளம் பாய்தலில் 5.3 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்தவருமான குமுது ப்ரியங்கா டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.

கையொன்றை இழந்த அல்லது கையின் மேல் பகுதி ஊனமுற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 50.1 செக்கன்களில் நிறைவு செய்த சமன் சுபசிங்க டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்தார்.

கால்களை வெட்டி அகற்றல் அல்லது காலொன்றின் அல்லது கால்கள் ஊனமுற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 60.88 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த சமித துலான், அதே போட்டிப் பிரிவில் பங்குகொண்டு 57.88 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சம்பத் ஹெட்டியாரச்சி ஆகிய இருவரும் டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டனர்

ஓலிம்பிக் புலமைப்பரிசில் பட்டியலிலிருந்து விதூஷா, கயன்திகா நீக்கம்

கால்களின் உயரங்களில் வித்தியாசம், கால்களின் கீழ் பகுதியின் உள்ள தசை பலவீனம் அல்லது செயலற்ற இயக்கம் கொண்டவர்களுக்கான சம்மட்டி எறிதலில் பங்குகொண்ட பாலித பண்டாரவும் (13.59 மீற்றர்) டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தினைப் பூர்த்தி செய்தார்.

முன்னதாக டோக்கியோ பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் பரா வீரர்களுக்கான தேசிய குழாம் அறிவிக்கப்பட்டது

இதில் இடம்பெற்றிருந்த நான்கு வீரர்கள் பரா ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான அடைவு மட்டத்தினை நெருங்கவில்லை. இதன் காரணமாக இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் போது குறித்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு தேசிய பரா ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்போது குறித்த நான்கு பரா வீரர்களும், தேசிய மெய்வல்லுனரில் பங்குபற்றவுள்ள வீரர்களுடன் போட்டியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<