மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரிக்கு சாதனை வெற்றி

1238

19 வயதுக்குட்பட்ட பிரிவு – III (டிவிஷன் – III) பாடசாலை அணிகளுக்கு இடையிலான சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி J. நிலுசாந்தின் சகலதுறை ஆட்டத்தினால் பதுளை மத்திய கல்லூரியினை 168 ஓட்டங்களால் வீழ்த்தி தமது கல்லூரி கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியொன்றினைப் பதிவு செய்துள்ளது.

போட்டியின் இரண்டாம் இன்னிங்சில் எதிரணியினை மிகவும் குறைவான ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்திய (31) புனித மைக்கல் கல்லூரி இந்தப் பருவகாலத்திற்கான டிவிஷன் – III பாடசாலைகள் கிரிக்கெட் தொடரில் இதுவரையில் பெறப்பட்ட வெற்றிகளில் சிறந்த வெற்றியொன்றினை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  

டிவிஷன் III கிழக்கு மாகாண சம்பியனாக முடிசூடிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன் III

இரண்டு நாட்கள் கொண்ட இந்தப் போட்டி கடந்த வியாழக்கிழமை (9) பதுளை கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு வீரர்கள் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தனர்.  

தொடர்ந்து ஆடுகளம் விரைந்த புனித மைக்கல் கல்லூரி 117 ஓட்டங்களினை தமது முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்டது. மைக்கல் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக N. சிந்தவன் 46 ஓட்டங்களினையும் J. நிலுசாந் 37 ஓட்டங்களினையும் பெற்றிருந்தனர். இதேவேளை, பதுளை மத்திய கல்லூரிக்காக சிரத் அகலன்க மற்றும் மஹேஷ் மதுரங்க ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.  

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சில் ஆடிய பதுளை வீரர்கள் மைக்கல் கல்லூரியின் பந்துவீச்சினை எதிர்கொள்ள மிகவும் தடுமாறியிருந்தனர். இதனால் 60 ஓட்டங்களுக்கே அனைத்து விக்கெட்டுக்களையும் பதுளை மத்திய கல்லூரி பறிகொடுத்து சுருண்டு கொண்டது. எதிரணியினை இவ்வாறு குறைந்த ஓட்டங்களுக்குள் நிர்மூலமாக்க பிரதான ஒருவராகப் பங்காற்றிய மைக்கல் கல்லூரியின் இடதுகை சுழல் வீரர் நிலுசாந் இதில் 19 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் T. ரோக்சன் 4 விக்கெட்டுக்களையும்  பதம்பார்த்திருந்தனர்.

மீண்டும் துடுப்பாடிய புனித மைக்கல் கல்லூரி தமது இரண்டாம் இன்னிங்சில் N. தியோரியன் மற்றும் நிலுசாந் ஆகியோரின் அரைச்சதங்களுடன் 142 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்

இளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில்..

மைக்கல் கல்லூரியின் இரண்டாம் இன்னிங்சினை அடுத்து பதுளை மத்திய கல்லூரிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 200 ஓட்டங்களினை பெறுவதற்கு அவ்வணியினர் தம்முடைய இரண்டாம் இன்னிங்சினை தொடங்கியிருந்தனர்.  

முதல் இன்னிங்சினை விட இம்முறை பதுளை வீரர்கள் மைக்கல் கல்லூரியின் பந்து வீச்சுக்கு மிகவும் தடுமாறியிருந்தனர். நிலுசாந் பந்துவீச்சில் மீண்டும் மிரட்ட வெறும் 31 ஓட்டங்களினையே பதுளை மத்திய கல்லூரியினர் இரண்டாம் இன்னிங்சில் பெற்று புனித மைக்கல் கல்லூரியிடம் படுதோல்வியடைந்திருந்தனர்.

மைக்கல் கல்லூரிக்கு இந்த இன்னிங்சிலும் உதவிய நிலுசாந் வெறும் 16 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை சாய்த்து தனது அணிக்கு இந்தப் பருவகாலத்தில் குறிப்பிடும் படியான வெற்றியொன்றினை பதிவு செய்ய உதவியிருந்தார்.  

வித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை

இலங்கை கனிஷ்ட அணியில் விளையாடும் வலதுகை சுழல்…

இன்னும், இப்போட்டியின் நான்கு இன்னிங்சுகளிலும் அசத்திய நிலுசாந்த் 94 ஓட்டங்களினை குவித்ததுடன் வெறும் 35 ஓட்டங்களுக்கு மொத்தமாக 12 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

போட்டியின் சுருக்கம்

புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு (முதல் இன்னிங்ஸ்)  -117 (51.3) N. சிந்தாவன் 46, J. நிலுசாந் 37, சிராத் அகலன்க 4/23, மகேஷ் மதுரங்க 4/37

பதுளை மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 60 (29) லக்ஷான் மதுபாசித் 27*, J. நிலுசாந் 5/19, T. ரோக்சான் 4/09

புனித மைக்கல் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 142/8d (43) J. நிலுசாந் 57, N. தியோரியன் 53*

பதுளை மத்திய கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 31 (18.3) J. நிலுசாந் 7/16

முடிவுபுனித மைக்கல் கல்லூரி 168 ஓட்டங்களால் வெற்றி