டிவிஷன் III கிழக்கு மாகாண சம்பியனாக முடிசூடிய ஏறாவூர் யங் ஹீரோஸ்

1624
Limited Over Eastern Province Cricket

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடாத்தப்படும் டிவிஷன் – III அணிகளுக்கு  இடையில் நடாத்தப்பட்ட விலகல் முறையிலான (Knock Out) கிரிக்கெட் சுற்றுத் தொடரின் கிழக்கு மாகாண இறுதிப் போட்டியில் அம்பாறை SSC அணியினரை 178 ஓட்டங்களால் வீழ்த்திய ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் மாகாண சம்பியனாக தெரிவாகியுள்ளது.

அம்பாறை D.S. சேனநாயக்க கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற இப்போட்டியில் விளையாடிய அம்பாறை SSC அணி, முன்னதாக இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மட்டக்களப்பு லக்கி விளையாட்டுக் கழகத்தினையும், ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் திருகோணமலை ஸ்பென்ஷ் விளையாட்டுக் கழகத்தினையும் தோல்வியடையச் விழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாமர சில்வாவுக்கு 2 வருடகால போட்டித் தடை

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சாமர சில்வாவுக்கு 2 வருடங்களுக்கு…

மைதான ஈரலிப்பினால் அணிக்கு 41 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த இப்போட்டியின்  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

ஏறாவூர் அணியின் ஆரம்ப வீரர்களான இர்ஷாத் மற்றும் நெளசாத் ஆகியோர் சிறப்பான ஒரு தொடக்கத்தினை தராத போதிலும் முன்வரிசை வீரர்களில் ஒருவரான இஹ்கான் அரைச் சதம் ஒன்றினை விளாசி தனது அணியினை பலப்படுத்தியிருந்தார். அவரின் ஓட்டத்தின் உதவியோடு ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 41 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

ஏறாவூர் அணி சார்பான துடுப்பாட்டத்தில் சிறப்பான முறையில் செயற்பட்ட இஹ்கான் 51 பந்துகளினை எதிர்கொண்டு 54 ஓட்டங்களினையும், அஸ்கான் 36 ஓட்டங்களினையும் அணித் தலைவர் AGM. பாஸில் 34 ஓட்டங்களினையும் குவித்து அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தனர்.

இதேவேளையில் அம்பாறை SSC அணியின் பந்து வீச்சில் அபாரத்தினை வெளிக்காட்டிய சுனில் 53 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 242 ஓட்டங்களை பெற பதிலுக்கு ஆடிய அம்பாறை SSC அணியினரை, ஏறாவூர் அணியின் தலைவர் AGM. பாஸில் அதி சிறப்பான பந்துவீச்சினை வெளிக்காட்டி  மிரட்டியிருந்தார். இதனால் 18.5 ஓவர்களில் வெறும் 63 ஓட்டங்களோடு சுருண்ட அம்பாறை SSC விளையாட்டுக் கழகம் ஏறாவூர் வீரர்களிடம் படுதோல்வியடைந்தது.  

அபரிமிதமான பந்து வீச்சு ஆற்றலை வெளிக்கொணர்ந்த ஏறாவூர் அணியின் தலைவர் AGM. பாஸில் 22 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை சாய்த்ததுடன், சப்ராஸும் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி தமது அணியினை சம்பியனாக  மாற்ற வழிவகைகள் செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் – 241/9 (41) இஹ்கான் 54, அஸ்கான் 36, AGM. பாஸில் 34, சுனில் 53/5

அம்பாறை SSC – 63 (18.5) AGM. பாஸில் 22/6, சப்ராஸ் 24/3

போட்டி முடிவுஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 178 ஓட்டங்களால் வெற்றி

இறுதிப்போட்டியில் வெற்றியடைந்து மாகாண சம்பியனாக மாறியிருக்கும் ஏறாவூர் யங் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் இர்சாத் ThePapare.com இடம் கருத்து தெரிவித்தபோது, நாம் கிழக்கு மாகாண ரீதியிலான இத்தொடரில் வெற்றி பெற்ற முதலாவது மட்டக்களப்பு அணியாக காணப்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். இதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள தேசிய ரீதியிலான தொடர்களில் வெற்றி பெற்று டிவிஷன் – II அணியாக தரமுயர முயற்சிப்பதே எமது எதிர்பார்ப்பு எனக் கூறியிருந்தார்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<