வித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை

3170

இலங்கை கனிஷ்ட அணியில் விளையாடும் வலதுகை சுழல் வீரர்களில் ஒருவரான கெவின் கொத்திகொடவின் வித்தியாசமான பந்துவீச்சுப் பாணி சமூக வலைதளங்களில் தற்போது அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

18 வயதாகும் கெவின் தற்போது மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை சார்பாக விளையாடிவருகின்றார். இத்தொடர் மூலமாகவே இலங்கை கனிஷ்ட அணிக்கு அறிமுகமாயிருக்கும் இவர் வித்தியாசமான சுழல் பந்துவீச்சுப்பாணியைக் கொண்ட தென்னாபிரிக்க அணியின் முன்னாள் இடதுகை சைனமன் பந்துவீச்சாளர் போல் அடம்சை (Paul Adams) ஒத்த விதத்தில் பந்துவீசுவது குறிப்பிடத்தக்கது. இதனால், இவரை போல் அடம்சின் வலதுகைப் பிரதி என தற்போது அனைவரும் அழைக்கின்றனர்.

Courtesy – Getty Images

இளையோர் ஆசியக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் உடனான போட்டியில் கெவின் விக்கெட் ஒன்றையும் கைப்பற்றி 61 ஓட்டங்களால்  இலங்கையை வெற்றி பெறச் செய்யவும் உதவியிருந்தார்.

காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் உனவட்டுனவைப் பிறப்பிடமாகக் கொண்ட கெவின் காலி றிச்மண்ட் கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியைப் பெற்றிருந்தார்.

இலங்கை A அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தம்மிக்க சுதர்ஷனவினால் பயிற்றுவிக்கப்பட்ட கெவின்  13 வயதுக்கு உட்பட்ட றிச்மண்ட் கல்லூரி அணியில் இருந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்திருந்தார்.

லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் வீழ்ந்த இலங்கை இளையோர் அணி

மலேஷியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண தொடரில் பாகிஸ்தானுடனான தனது கடைசி குழுநிலை…

எனினும் சில காரணங்களுக்காக பின்னர் காலி மஹிந்த கல்லூரிக்கு மாறியிருந்த அவர் அக்கல்லூரியின் 19 வயதுக்கு உட்பட்ட அணியை கடந்த காலங்களில் பிரதிநிதித்துவம் செய்து தற்போது தேசிய அணிக்காக (Sri Lanka U-19s) கடமை புரியும் வாய்ப்பை பெற்றிருக்கின்றார்.

அவரிடம் வழமைக்கு மாறான பந்துவீச்சுப் பாணி அமைந்துள்ளது. அது போல் அடம்சின் பந்துவீச்சை ஒத்ததாக காணப்படுகின்றது. இந்த பந்துவீச்சுப்பாணி யாரும் பயிற்றுவித்தோ அல்லது வேறுவிதமாகவோ அவருக்கு கிடைக்கவில்லை. இது அவருக்கு இயற்கையாகவே வந்திருக்கின்றது. பந்துவீசும் வேளைகளில் மைதானத்தை அவருக்கு பார்க்க இயலாததன் காரணமாக முன்னர் சில சிரமங்களை எதிர்கொண்டிருந்தார். எனினும், தற்போது அவற்றை அவர் திருத்தி சிறந்த விதத்தில் செயற்படுகின்றார் என கெவினின் பயிற்சியாளர் சுதர்சன அவர் பற்றி கிரிக்பஸ் (Cricbuzz) செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருந்தார்.

அவரது பந்துவீச்சுப்பாணி வித்தியாசமாக அமைந்திருப்பதனால், துடுப்பாட்ட வீரர்கள் குழப்பமடைகின்றனர். த்தோடு அவர் துடுப்பாட்டத்திலும், களத்தடுப்பிலும் சிறந்த விதமாக செயற்படுவது, அவருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கின்றது என்பதனை உறுதிப்படுத்துகின்றதுஎன மேலும் சுதர்ஷன கெவின் பற்றி கருத்து தெரிவித்திருந்தார்.

1995 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் வெற்றிகளில் சமநிலை அடைந்ததை அடுத்து போர்ட் எலிசபெத் நகரில் நடைபெற்ற போட்டியில் 18 வயதேயான போல் அடம்சை தென்னாபிரிக்கா அறிமுகம் செய்திருந்தது.

தென்னாபிரிக்க அணிக்காக தான் பங்குபற்றிய அத்தொடரின் இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 8 விக்கெட்டுகளை சாய்த்த அடம்ஸ் அந்த டெஸ்ட் தொடரின் வெற்றியாளராக தனது தரப்பு மாற உதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.