19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு மாற்றம் செய்வதற்கு ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் வருடாந்த கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட மறுத்ததையடுத்து குறித்த தொடரை  மலேசியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இப்போட்டித் தொடர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லையில் நிலவுகின்ற தீவிர தாக்குதல்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையில் 2007ஆம் ஆண்டு முதல் எந்தவொரு விளையாட்டிலும் நேரடி தொடர் நடத்தப்படவில்லை. குறிப்பாக 2012ஆம் ஆண்டிலிருந்து எந்தவொரு கிரிக்கெட் தொடரும் நடைபெறாமல் இருக்கிறது. எனினும் பொதுவான இடத்தில் குறித்த தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான் முன்வந்த போதிலும், இந்திய அரசு அதற்கு அனுமதி வழங்குவதை புறக்கணித்து வந்தது.

13 வருடங்களின் பின் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

13 வருடங்களின் பின் மோசமான சாதனை படைத்த இலங்கை அணி

இந்தியாவுடனான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும்

எனினும், 2014 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் ஆறு கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு ஐ.சி.சி அனுமதி வழங்கியிருந்தது. எனினும், இந்திய கிரிக்கெட் சபை அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத காரணத்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஒரு பில்லியன் ரூபாய் பணத்தை இந்தியாவிடம் நஷ்ட ஈடாக கோரி சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்தது.

இந்நிலையில் பெங்களுரில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண இளையோர் கிரிக்கெட் தொடர் நடைபெறவிருந்தது. இந்திய அணி தங்களுக்கு எதிராக விளையாட மறுக்கும் வேளையில், இந்த தொடரை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி வலியுறுத்த விரும்புவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அண்மையில் தமது வருடாந்த பொதுக்குழுக் கூட்டத்தின் போது தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கடந்த 11ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் சம்மேளன பொதுக் கூட்டத்தில் அதன் தலைவரான நஜாம் சேதி (பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர்), குறித்த போட்டிகளை பாதுகாப்புக் கருதி பிரிதொரு இடத்தில் நடத்துவதற்கு தாம் விரும்புவதாக அறிவித்தார். ஆனால் இந்திய கிரிக்கெட் சபை சார்பாக கலந்துகொண்ட அதிகாரிகள் இதற்கு எந்தவொரு எதிர்ப்பையும் வெளியிடாத காரணத்தால் பெரும்பான்மை ஆதரவுடன் இவ்வருடத்துக்கான ஆசிய கிண்ண இளையோர் கிரிக்கெட் தொடரை மலேசியாவில் நடத்துவதற்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இதன்படி இம்முறை இரு பிரிவுகளாக நடைபெறவுள்ள இளையோர் ஆசிய கிண்ணத்தில் 8 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. நடப்புச் சம்பியனான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அண்மையில் டெஸ்ட் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொண்ட ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றதுடன், போட்டிகளை நடாத்தும் மலேசியாவுடன் மேற்கு ஆசிய மற்றும் தென் பிராந்திய ஆசிய நாடுகளிலிருந்து இரு அணிகளும் பங்குபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செப்டம்பரில் பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

செப்டம்பரில் பாகிஸ்தான் செல்கிறது இலங்கை அணி

இலங்கை அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த

இந்நிலையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நியூசிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி இன் இளையோர் உலகக் கிணண்த்தில் பங்குபெற தகுதிபெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் இப்போட்டியில் விளையாடுவதற்கு அனுமதி வழங்க ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, அடுத்த வருடம் இந்தியாவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரையும் பிரிதொரு நாட்டில் நடத்துவது தொடர்பிலான இறுதி முடிவை அடுத்த ஆசிய கிரிக்கெட் சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.