தென்னாபிரிக்க தொடரை ஒத்திவைத்த அவுஸ்திரேலியா!

Australia tour of South Africa 2021

202

கொவிட்-19 வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இம்மாதம் இறுதியில், தென்னாபிரிக்காவில் விளையாடவிருந்தது. எனினும், தென்னாபிரிக்காவில் கொவிட்-19 தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. எனவே, தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுப்பயணம் இடம்பெறாது என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி நிக் ஹொக்லி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களுக்கு அனுமதி

இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட இவர், “தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கொவிட்-19 வைரஸின் தாக்கம் என்பவை தொடர்பில் கேள்விகள் அதிகரித்துள்ளன. எனவே, சுகாதார அதிகாரிகளின் அறிவிப்புக்கு அமைய, எமது வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தொடர் ஒத்திவைக்கப்படுகிறது.

இந்த முடிவினை நாம் இலகுவாக எடுக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட்டை தொடர்ந்தும் நடத்துவதற்கான முக்கியத்துவத்தை கொடுத்தும், இந்த தீர்மானம் ஏமாற்றத்தை அளிக்கிறது. நாம் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் போட்டியிடுவதற்கு ஆர்வமாக இருந்தோம்” என்றார்.

அவுஸ்திரேலிய அணியானது, தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள நிலையில், அவர்களுக்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு நழுவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அவுஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்கும் பட்சத்தில், நியூசிலாந்து அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் முதல் அணி என்ற பெருமையை பெற்றுக்கொள்ளும். அத்துடன், இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான தொடரில் வெற்றிபெறும் அணிக்கு, ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இறுதியாக இலங்கை அணியானது, தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தது. இதில், தென்னாபிரிக்க அணி 2-0 என வெற்றிபெற்றிருந்தது. அதேநேரம், தற்போது பாகிஸ்தான் மகளிர் அணி, தென்னாபிரிக்காவுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<