இளையோர் ஆசிய கிண்ணத்தில் இலங்கை, இந்தியா வெளியேற்றம்

740

இளையோர் ஆசியக் கிண்ண போட்டியில் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய இலங்கை மற்றும் இந்திய அணிகள் இம்முறை தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெறாமல் லீக் சுற்றுடனேயே வெளியேறின.

மலேஷியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட ஆசிய கிண்ண போட்டியில் இன்றுடன் குழு நிலை ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஐக்கிய அரபு இராச்சியத்தை அதிக ஓட்ட வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. அதேபோன்று இந்தியா இன்று தனது கடைசி குழுநிலைப் போட்டியில் பங்களாதேஷிடம் தோற்று வெளியேறியது.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் செயற்படும் இந்திய இளையோர் அணி இரு தினங்களுக்கு முன் நேபாளத்திடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் வரலாறு படைக்குமா?

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி இந்த தொடரின் முதல் இரு போட்டிகளிலும் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி B குழுவில் முன்னிலை பெற்றபோதும் பாகிஸ்தானுடனான போட்டியில் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டி தோல்வியை சந்தித்ததால் மோசமான நிகர புள்ளிகளை பெற்றது.

இந்நிலையில் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேற இன்று நடந்த ஆப்கானுடனான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெற்றி பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

கோலாலம்பூர், கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டி ஆரம்பத்தில் மழையால் தடைப்பட்டது. இதனால் 20 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 224 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. மத்திய வரிசையில் வந்த டார்விஷ் ரசூலி 38 பந்துகளில் ஆட்டமிழக்காது 105 ஓட்டங்களை விளாசினார்.  

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களையே பெற்றது. இதன் மூலம் 134 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ஆப்கான் அணி நிகர புள்ளிகள் அடிப்படையில் B குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு பாகிஸ்தான் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இதனால் இந்த இரு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியதோடு B குழுவில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை அணி தொடரில் இருந்து வெளியேறியது.

மறுபுறம் A குழுவில் கடைசி இரு லீக் போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 32 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களையே பெற்றதோடு பங்களாதேஷ் அணி 28 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

வித்தியாசமான சுழல் வீரரை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தும் இலங்கை

அதேபோன்று மலேஷியா மற்றும் நேபாள அணிகளுக்கு இடையிலான மற்றைய லீக் போட்டியில் நேபாள அணி 8 விக்கெட்டுகளால் வென்று அரையிறுதிக்கு முன்னேற்றம் கண்டது.

லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறிய பங்களாதேஷ் அணி, பாகிஸ்தானை அரையிறுதியில் எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

இளையோர் ஆசிய கிண்ணத்தின் மற்றைய அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கோலாலம்பூரில் நடைபெறும்.

இளையோர் ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நவம்பர் மாதம் 19 ஆம் திகதி கோலாலம்பூர் கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.