IPL வரலாற்றில் சரித்திரம் படைத்த சாஹல்

Indian Premier League 2023

157

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், இந்தியன் பிரீமியர் லீக் (IPL) வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

IPL தொடரில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான 56ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. யுஸ்வேந்திர சாஹலின் அபார பந்துவீச்சு மற்றும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிவேக IPL அரைச் சதம் என்பன கொல்கத்தா அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெங்கடேஷ் அய்யர் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 150 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அணித்தலைவர் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த யுஸ்வேந்திர சாஹல், இந்தப் போட்டியின் மூலம் IPL வரலாற்றில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

இதன்போது, கொல்கத்தா அணியின் தலைவர் நிதிஷ் ராணாவின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் IPL தொடரில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.

இதற்கு முன்பு சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சகலதுறை வீரர் டுவைன் பிராவோ 183 விக்கெட்டுகள் எடுத்து முதல் இடத்தில் இருந்தார். அந்தச் சாதனையை ஜெய்ப்பூரில், கடந்த மே 7ஆம் திகதி நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் எடுத்து சமன் செய்திருந்த சாஹல், இந்தப் போட்டியில் அதிக விக்கெட்களை (187 விக்கெட்டுகள்) வீழ்த்தி டுவைன் பிராவோவை 2ஆவது இடத்திற்குத் பின்னுக்கு தள்ளி புதிய வரலாறு படைத்தார்.

பிராவோ 161 IPL போட்டிகளில் எடுத்த இந்தச் சாதனையை, சாஹல் 143 போட்டிகளில் எடுத்துள்ளார். அதேநேரத்தில், பிராவோ தற்போது IPL தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் பியூஸ் சாவ்லா (174), அமித் மிஸ்ரா (172), ரவிச்சந்திரன் அஸ்வின் (171) ஆகியோர் உள்ளனர்.

மேலும், இந்தப் போட்டியில் 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாஹல், இம்முறை IPL தொடரில் மதீஷ பத்திரனவிற்குப் பிறகு டெத் ஓவர்களில் (16-20) அதிக விக்கெட்களை (11) வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் சென்னை அணி வீரர் மதீஷ பத்திரன 12 விக்கெட்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் IPL தொடரில் விளையாடி வரும் சாஹல், மும்பை இந்தியனஸ், றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளிலும் இடம்பெற்று விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<